
இன்றைக்கு டேஸ்டியான முள்ளங்கி சப்பாத்தி மற்றும் தயிர் குலோப் ஜாமுன் ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
முள்ளங்கி சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்.
முள்ளங்கி-3
பச்சை மிளகாய்-2
கோதுமை மாவு-2 கப்.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்-தேவையான அளவு.
கொத்தமல்லி-சிறிதளவு.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
முள்ளங்கி சப்பாத்தி செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் கோதுமை மாவு 2 கப் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு சப்பாத்தி மாவு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது முள்ளங்கி 3 நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும். முள்ளங்கி துருவலில் இருக்கும் நீரை வடித்துவிட்டு கடாயில் சிறிது எண்ணெய்விட்டுமுள்ளங்கித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2 சேர்த்து வதக்கவும். இதில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், கடைசியாக கொத்தமல்லி சிறிது சேர்த்து வதக்கி இறக்கிவிடவும்.
இப்போது பிசைந்து வைத்துள்ள மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி திரட்டிக் கொள்ளவும். இப்போது செய்து வைத்திருக்கும் முள்ளங்கி கலவையை சப்பாத்தியின் நடுவிலே வைத்து மடித்து கனமான சப்பாத்தியாக தயார் செய்யவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் சிறிது எண்ணெய் விட்டு செய்து வைத்திருக்கும் சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகும் வரை திருப்பிப்போட்டு எடுக்கவும். அவ்வளவுதான். சுவையான முள்ளங்கி சாப்பாத்தி தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.
தயிர் குலோப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்.
தயிர்-1/2 கப்.
சர்க்கரை-1 ½ கப்.
மைதா-1 கப்.
பால்பவுடர்-3 கப்.
சமையல் சோடா-1 தேக்கரண்டி.
தண்ணீர்-4கப்.
நெய்-தேவையான அளவு.
தயிர் குலோப் ஜாமுன் செய்முறை விளக்கம்.
முதலில் கடாயில் 4 கப் தண்ணீர் வீட்டு அதில் 1 ½ கப் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். இப்போது ஒரு பவுலில் மைதா மாவு 1 கப், பால் பவுடர் 3 கப், தயிர் ½ கப், சமையல் சோடா1 தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் விட்டு மாவை உருண்டைகளாக பிசைந்துக் கொள்ளவும். இப்போது கடாயில் தேவையான அளவு நெய் விட்டு காய்ந்ததும், உருண்டைகளை அதில் போட்டு நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதை ஏற்கனவே செய்து வைத்திருக்கும் சர்க்கரை பாகில் சேர்த்து ஊற வைக்கவும். அவ்வளவு தான் டேஸ்டியான தயிர் குலோப் ஜாமுன் தயார்.