தூத் ஜிலேபி ஒரு பாரம்பரிய இந்திய டெஸ்ஸர்ட் உணவாகும். வெது வெதுப்பான பாலையும் கிரிஸ்பியான ஜிலேபியையும் ஒரே நேரம் சேர்த்து உண்பது நாவிற்கு அற்புதமான சுவையை தருவதோடு உடலுக்கும் பல வகையான ஊட்டச் சத்துக்களைத் தர வல்லது. அவ்வாறு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. உடனடி சக்தி: ஜிலேபி அதிகளவு கலோரி தரக்கூடிய ஓர் உணவு. இதிலிருக்கும் மாவுப் பொருட்களும் சர்க்கரையும் உடலுக்கு உடனடி சக்தியைத் தரக் கூடியவை. ஜிலேபியோடு பாலும் சேர்த்து உட்கொள்ளும் போது, பாலிலுள்ள ப்ரோட்டீன் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் உடலுக்குத் தொடர்ந்து நீண்ட நேரம் சக்தி கிடைக்க உதவி புரியும்.
2. எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்: பாலில் கால்சியம் சத்து மிக அதிகம். பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பேணிப் பராமரிக்க கால்சியம் தேவை. ஜிலேபியோடு சேர்த்து பால் அருந்தும்போது உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைத்துவிடும். குறிப்பாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இது சிறந்த முறையில் உதவும்.
3. குளிர் காலங்களில் உண்பதற்கேற்ற உணவு:
தூத் ஜிலேபியை குளிர் நேரங்களில் உண்ணும்போது பாலின் வெது வெதுப்பு உடல் உஷ்ணநிலையை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும். ஜிலேபியின் இனிப்புச் சுவை குளிரினால் உண்டாகும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் மகிழ்ச்சியான மனநிலை உண்டாகவும் உதவி புரியும்.
4. சிறப்பான செரிமானத்துக்கு உதவும் பண்பு: பாலின் ஆற்றுப்படுத்தும் குணமானது வயிற்றின் உட்புற சுவர்களை பண்படுத்தி இதமாக வைக்க உதவும். ஜிலேபியின் இனிப்புச் சுவை செரிமானத்திற்கு உதவும் என்சைம்களின் அளவை சமநிலைப்படுத்த உதவி புரியும். இப்படி இரண்டும் இணைந்து செயல்படும்போது குடல் இயக்க உறுப்புகளில் உண்டாகும் சிறிய அளவிலான கோளாறுகள் குணமடையவும் வாய்ப்பு உண்டாகும்.
5. ஆரோக்கியமான அளவுக்கு உடல் எடை அதிகரிக்க உதவும்: மெல்லிய உடல் வடிவம் கொண்டவர்கள், தூத் ஜிலேபியை அளவோடு உட்கொண்டால், அதிலுள்ள கார்போஹைட்ரேட்ஸ், ப்ரோட்டீன்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்துக்கள் உடல் எடை கணிசமான அளவுக்கு அதிகரிக்கத் தேவையான கலோரிகளை வழங்கி உதவி புரியும்.
6. தேவையான ஊட்டச் சத்துக்கள் அளித்து உதவும்:
பாலில் உடலுக்குத் தேவையான வைட்டமின் D, B12, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பாலை ஜிலேபியுடன் சேர்த்து உண்ணும்போது தொடர் சக்தியுடன் கனிமச் சத்துக்களும், வைட்டமின்களும் உடலுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டாகிறது. கடினமான உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பிற்குப் பின் உண்டாகும் சோர்வு நீங்கவும், தசைகளின் சீரமைப்பிற்கும் தூத் ஜிலேபி சிறந்த முறையில் உதவும். தூத் ஜிலேபி உடலை தளர்வுறச் செய்து அமைதியான உறக்கம் பெறவும் உதவும்.
ஜிலேபியை ஃபிரஷ்ஷாகச் செய்து குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட சூடான பாலோடு சேர்த்து அளவோடு சாப்பிடுவது ஆரோக்கியம். இந்த ஆரோக்கியம் நிறைந்த தூத் ஜிலேபியை காலை உணவுடன் எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. அதன் மூலம் நாள் முழுக்கத் தேவைப்படும் சக்தி உடலுக்குக் கிடைக்கும்.