
முருகப்பெருமானுக்கு படைக்கப்படும் நைவேத்தியமான திருப்பாகம் மற்றும் பஞ்சாமிர்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
திருப்பாகம் செய்ய தேவையான பொருட்கள்.
கடலை மாவு-1கப்.
பால்-1கப்.
நெய்-1கப்.
குங்குமப்பூ- சிறிதளவு.
சர்க்கரை-1 ½ கப்.
முந்திரி பவுடர்-1 கப்.
திருப்பாகம் செய்முறை விளக்கம்.
முதலில் 1 கப் கடலை மாவை கடாயில் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வறுத்துக் கொள்ளவும். இதை பவுலுக்கு மாற்றிவிட்டு, பால் 1 கப் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிட்டுக் கொள்ளவும்.
கடாயில் இந்த கலவையை ஊற்றி கலந்துவிட்டுக் கொண்டே இருக்கவும். இந்த கலவை பேஸ்ட் மாதிரி வரும்போது 1 ½ கப் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும். இப்போது இந்த கலவை இளகிவர தொடங்கும். இப்போது முந்திரி பவுடர் 1 கப்பை சேர்த்து கலந்துவிடவும். 1 கப் நெய்யை சிறிது சிறிதாக விடவும்.
கடைசியாக நெய் 'திருப்பாகத்தில்' இருந்து பிரிந்து வர தொடங்கும். அப்போது பாலில் கலந்து வைத்திருக்கும் குங்குமப்பூவை சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும். அவ்வளவுதான் முருகப்பெருமானின் பிரசாதமான திருப்பாகம் தயார்.
நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே செய்து முருகப்பெருமானுக்கு படைத்து அவன் அருளைப் பெருங்கள்.
பஞ்சாமிர்தம் செய்ய தேவையான பொருட்கள்.
வாழைப்பழம்- 5
கல்கண்டு- 3 தேக்கரண்டி
நாட்டுச்சர்க்கரை- 3 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை- 3 தேக்கரண்டி
தேன்- 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள்- 1 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
பேரிச்சம்பழம்- 4 தேக்கரண்டி
பஞ்சாமிர்தம் செய்முறை விளக்கம்.
முதலில் பவுலில் 5 வாழைப்பழத்தை தோல் உரித்து விட்டு போட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். இப்போது இதில் கல்கண்டு 3 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் நாட்டுச்சர்க்கரை 3 தேக்கரண்டி, உலர்ந்த திராட்சை 3 தேக்கரண்டி, சிறிதாக நறுக்கிய பேரிச்சம்பழம் 4 தேக்கரண்டி, தேன் 3 தேக்கரண்டி, நெய் 2 தேக்கரண்டி, ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக கலந்துவிடவும். அவ்வளவுதான் சுவையான பஞ்சாமிர்தம் தயார்.
முருகப்பெருமானுக்கு படைத்து அவன் அருளைப் பெறுங்கள்.