

கத்திரிக்காய் பிரியாணி
தேவை:
அரிசி - 3 கப்
கத்திரிக்காய் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 7
தக்காளி - 5
பச்சை மிளகாய் - 5
தயிர் - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவைக்கேற்ப
ஏலக்காய் 3
தாளிக்க :
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய் போட்டு நன்கு வதக்கவும். கத்திரிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர் ஊற்றி வதக்கி அரிசியையும் போட்டு நன்கு கிளறவும்.
4 கப் தண்ணீர் கொதித்ததும், கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரி, கடலைப்பருப்பு (வறுத்ததை) போட்டு சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம். கம கம கத்திரிக்காய் பிரியாணி ரெடி.
தவா கத்தரிக்காய் ஃபிரை
தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் - 10
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மோர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
செய்முறை:
கத்தரிக்காயை கழுவி காம்புகளை நீக்கி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பின் உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் அல்லது தட்டில் கடலைமாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்த பின் பூண்டு விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீர் ஏதும் சேர்க்க வேண்டாம்.
இப்போது கத்தரிக்காயை தண்ணீரில் இருந்து வடிகட்டி ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும். ஒவ்வொரு துண்டுகளையும் இரண்டு புறமும் மோரில் லேசாக நனைத்து பின்பு கலந்து வைத்துள்ள கடலைமாவு கலவையில் இரண்டு பக்கமும் நன்றாக பிரட்டி தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு இரும்பு தோசைக்கல்லை மிதமான தீயில் காயவைத்து கடலைமாவில் பிரட்டி வைத்திருந்த கத்தரிக்காய் துண்டுகளை வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வெந்து முறுகலானதும் இறக்கவும். சூப்பரான சுவையில் கத்தரிக்காய் தவா ஃப்ரை தயார்.
கத்தரிக்காய் கடைசல்
தேவை:
கத்திரிக்காய் - 4
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 1
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, சீரகத்தூள், வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவேண்டும்.
பின்பு வேகவைத்த கத்திரிக்காய் கலவையை ஒரு மண் பாத்திரம் அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, அந்த கத்திரிக்காய் கலவையில் ஊற்றி, தேவையான அளவு உப்பை போட வேண்டும். பின் மத்தை வைத்து அதனை கடைந்துகொள்ள வேண்டும். சுவையான கத்திரிக்காய் கடைசல் ரெடி.
கத்தரிக்காய் ஊறுகாய்
தேவை:
கத்தரிக்காய் - 500 கிராம்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்தூள் - 50 கிராம்
வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
வற மிளகாய் - 2
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
கத்தரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, நறுக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், சேர்த்து, கத்தரிக்காயுடன் கலக்கவும். அப்படியே இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்தரிக்காயை எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றிக் கலக்கவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்தரிக்காயில் போட்டுக் கலந்தால், சுவையான கத்தரிக்காய் ஊறுகாய் தயார்.