

வெள்ளை நிற உணவுகள் பொதுவாக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் வெள்ளை நிறத்தில் உள்ள உணவுப் பொருட்களை பெரும்பாலானவர்கள் ஒதுக்கி விடுகின்றனர். சர்க்கரை, உப்பு போன்ற வெள்ளை பொருட்களை அதிகமாக உபயோகப்படுத்த உடல் ஆரோக்கியம் கெடும். ஆனால் உண்மையில் எல்லா வெண்மை நிற உணவு பொருட்களும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பது இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இயற்கையாக கிடைக்கும் வெள்ளை நிற உணவு பொருட்களில் சில அத்தியாவசியமான சத்துக்களும் நிரம்பியுள்ளன. அப்படிப்பட்ட சில உணவுப் பொருட்களை இப்பகுதியில் காணலாம்.
காலிஃபிளவர்:
வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் சி, ஃபைபர் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது. செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், எலும்புகளை வலுப்படுத்தும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் ஆரோக்கியமான உணவிற்கு ஏற்றது.
காளான்:
இது ஒரு முழு சைவ உணவு. இதில் சூப், பிரியாணி, கட்லெட், பஜ்ஜி என பல வகைகளில் செய்து உண்ணலாம். இதனை மற்ற காய்கறிகளுடன் சேர்த்தும் சமைக்கலாம். புற்றுநோய் அபாயத்தை குறைப்பதுடன் வைட்டமின் டி நிறைந்த, எடை இழப்புக்கு உதவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதம், வைட்டமின்கள்(B வைட்டமின்கள்) மற்றும் தாதுக்கள் நிறைந்தது உணவு இது.
வெள்ளைப் பூண்டு:
பச்சையாக சாப்பிடலாம் அல்லது அவற்றை நசுக்கி ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிடலாம். பூண்டு குழம்பு, சட்னி என செய்து ருசிக்கலாம். பூண்டில் அலிசின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது.
வெள்ளை பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்:
வெள்ளை பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை பார்லி, சோளம் அல்லது கோதுமை போன்ற தானியங்களுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம். வெள்ளை நிறத்தில் கிடைக்கும் பருப்பு வகைகள் புரதம், ஃபைபர், ஃபோலேட் மற்றும் இரும்பு சத்து போன்றவற்றைக் கொண்டது.
வெள்ளை வெங்காயம்:
வெள்ளை வெங்காயம் கொண்டு குருமா, சட்னி, சூப், தக்காளி சாஸ்கள் போன்றவற்றில் சேர்க்க சுவை கூடும். இவை மெக்சிகன் மற்றும் ஐரோப்பிய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு வெங்காயத்தைப் போலவே அதிக சர்க்கரை மற்றும் குறைந்த கந்தக உள்ளடக்கத்தை கொண்டது.
பால் பொருட்கள்:
பால் மற்றும் பிற பால் பொருட்களான தயிர், சீஸ், வெண்ணெய் போன்றவை புரதம், கால்சியம் மற்றும் கொழுப்பு போன்ற அத்தியாவசியமான ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளன. இவை வலுவான எலும்புகளுக்கும், பற்களுக்கும் ஒட்டு மொத்த ஆரோக்கியம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
முட்டை:
முட்டை கிரேவி, ஆம்லெட் என ஆரோக்கியமான உணவாக செய்து ருசிக்கப்படும் முட்டையில் புரதம், வைட்டமின் டி மற்றும் தாதுக்கள் நிறைந்து ஒரு முழுமையான உணவாக உள்ளது. இவை எலும்புகளை வலுப்படுத்தவும், தசை வளர்ச்சிக்கு உதவவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது.
தேங்காய்:
தேங்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உணவின் சுவையை மேம்படுத்துவதுடன் வயிற்றுப் புண்கள் ஏற்படாமலும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், மாவுச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்ட சத்துக்களை கொண்டுள்ளது.
டோஃபு:
டோஃபு என்பது சோயாபீன் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பனீர் போன்ற உணவுப் பொருளாகும். இது புரத சத்து நிறைந்தது. சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் புரதம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளன. இதனை பனீர் போன்று பயன்படுத்தலாம் மற்றும் பல வகையான சமையல் வகைகளிலும் சேர்க்கலாம்.
வாழைப்பழம்:
பல்வேறு வகைகளிலும் சுவைகளிலும் கிடைக்கும் ஒரு சத்தான பழமாகும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால் உடற்பயிற்சிக்கு முன்பு அல்லது காலை உணவின்போது எடுத்துக்கொள்ள சிறந்த ஆற்றலை வழங்குகிறது.