
ஆந்திரா சமையல் அதன் காரமான சுவை மற்றும் தனித்துவமான மசாலாக்களுக்கு பெயர் பெற்றது. ஆந்திரா பிரியாணி, கோங்குரா பச்சடி, குட்டி வங்கயா கூரா எனும் பிரபலமான கத்திரிக்காய் கறி, காரசாரமான சட்னி வகைகள், பருப்பு பொடிகள் மற்றும் சுண்ணுண்டாலு எனும் ஒரு வகை பருப்பு உருண்டை என அனைத்தும் பிரபலமான உணவுகளாகும்.
அதுகுல அட்டு (தோசை):
இட்லி அரிசி ஒரு கப்
கெட்டி அவல் 1/2 கப்
உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
ஆந்திராவின் பிரபலமான காலை உணவு இது. அரிசி மற்றும் அவல் இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும். அரிசி, உளுந்தை 2 மணி நேரமும், அவல் சீக்கிரம் ஊறிவிடும் என்பதால் ஒரு மணி நேரமும் ஊறினால் போதும். ஊறியதும் இரண்டையும் சேர்த்து நன்கு அரைக்கவும். தேவையான உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் மாவை புளிக்க வைக்கவும். இப்பொழுது சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றி மெல்லிய தோசைகளாக வார்க்க பட்டு பட்டாக, மெத்து மெத்தென்று இருக்கும்.
உடனடியாக வார்க்க வேண்டும் என்றால் புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் புளிப்பான தயிர் அரை கப் சேர்த்து உடனடியாக வார்க்கலாம். இவற்றை வார்த்து வைத்து சில மணி நேரங்களுக்கு பிறகும் காய்ந்து வறண்டு போகாமல் மென்மையாக மெத்து மெத்தென்று இருக்கும். இந்த அதுகுல அட்டுவுக்கு தொட்டுக்கொள்ள இட்லி பொடி மற்றும் தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும். செய்வதும் எளிது, ருசியும் சூப்பராக இருக்கும்.
உலவச்சாறு:
கொள்ளு பருப்பு 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சை மிளகாய் 4
பூண்டு 10 பற்கள்
கருவேப்பிலை சிறிது
புளி சிறிய எலுமிச்சையளவு
தனியாப் பொடி 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
கொத்துமல்லி தழை சிறிது
உப்பு தேவையானது
மஞ்சள் தூள்
தாளிக்க: கடுகு, சீரகம், கறிவேப்பிலை
கொள்ளு பருப்பு, மசாலா பொருட்களால் செய்யப்படும் இந்த ரசம் நாவை சப்புகொட்ட வைக்கும். கொள்ளு பருப்பை இரவே ஊற வைத்துவிடவும். காலையில் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் கீறிய பச்சை மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வதக்கி அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியையும் சேர்க்கவும். தேவையான உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வெங்காயம் கண்ணாடி போல் மென்மையாகும்வரை மூடி வைக்கவும்.
இப்பொழுது ஊறிய கொள்ளுடன் (2 ஸ்பூன்) சிறிது வடிகட்டிய நீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை வடிகட்டிய கொள்ளு பருப்பின் தண்ணீருடன் கலந்துகொள்ளவும்.
புளியை நீர்க்க கரைத்து ஒரு கப் அளவில் எடுத்து சேர்த்து,1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் கரைத்து வைத்துள்ள கொள்ளு பருப்பு தண்ணீரை விட்டு கொதிக்கவிடாமல் மூச்சு வரும் பதத்தில் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.
உலவச்சாறில் கிரீம் சேர்த்து சூப் போலவும் பருகலாம். விருப்பப்பட்டால் சூப்பிற்கு மேல் சிறிது பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து பரிமாறலாம்.
சத்தான உணவான இது குளிர்காலங்களில் சளி தொல்லை ஏற்படாமல் உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளும். மிகவும் ருசியான, காரசாரமான உலவச்சாறு தயார். சூடான சாதத்துடன் சூடாக பரிமாறவும்.