

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புரோட்டின் சக்தி என்பது இன்றியமையாதது. தினம் முட்டையை வேகவைத்து அல்லது ஆம்லெட்டாக கொடுத்தால் இதையே சாப்பிட வேண்டுமா என்று சலிப்பார்கள். அதையே இன்றைய நவீன சமையலில் கலந்து தந்தால் 'சூப்பர்' என்று உச்சி கொட்டி சாப்பிடுவார்கள். அப்படி ஒரு ரெசிபிதான் இந்த "மக்ரோனி வித் முட்டை பாஸ்தா". இதை செய்து தந்து பாருங்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களிடமும் உங்களுக்கு பாராட்டுக்கள் நிச்சயம்.
தேவையான பொருட்கள்:
மக்ரோனி அல்லது உங்களுக்கு பிடித்த பாஸ்தா- 2 கப்
முட்டை- 5
வெண்ணைய் - 50 கிராம் உப்பில்லாதது இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 4 பற்கள்
சீஸ் - தேவைக்கு
சில்லி ஃப்ளக்ஸ் - சிறிது
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய்- 1
குடைமிளகாய்- 1 மீடியம் சைஸ்
தக்காளி- 1 பெரியது
உப்பு - 1டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4டீஸ்பூன்
கஷ்மீரி மிளகாய் தூள்- 1 டீஸ்பூன் டொமேட்டோ கெட்சப் -2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிது
செய்முறை:
மக்ரோனி அளவைவிட மூன்று பங்கு தண்ணீர் அதிகம் வைத்து நன்றாக கொதித்ததும் மக்ரோனிகளை போட்டு கலந்துவிட்டு நன்றாக வேகும்வரை விட்டு வெந்ததும் எடுத்து நீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும். ஒரு சிறிய பானில் சிறிது நெய் ஊற்றி அதில் உடைத்து அடித்த முட்டைகளை ஊற்றி அதில் அரை டீஸ்பூன் உப்பு அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பொரியல் துணுக்குகள் போல் முட்டை வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் உப்பு இல்லாத வெண்ணையை போட்டு சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி நன்கு வாசம் வந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் சற்றே சதுரமாக நறுக்கிய குடைமிளகாய் துண்டுகளை போட்டு வதக்கி அதனுடன் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு, மிளகு தூள், சீரகத்தூள் தனியாத்தூள், கரம் மசாலா, காஷ்மீரி மிளகாய்த்தூள் போட்டு மேலும் நன்கு வதக்கவும். இப்போது அதில் இரண்டு ஸ்பூன் கச்சப் போற்றி மேலும் கலந்து அதனுடன் வெந்த மக்ரோனிகளைப் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கலந்துவிடவும். இதில் தனியே செய்து வைத்துள்ள முட்டை துணுக்குகளை போட்டு கலந்து விட்டு மேலே சீஸ், சில்லிப்ளேக்ஸ், கொத்தமல்லித்தழை தூவி மூடிவைக்கவும். சுவையான சூப்பரான மக்ரோனி வித் முட்டை பாஸ்தா ரெடி.