

மேத்தி பரோட்டா மற்றும் மேத்தி சப்ஜி ரெசிபி:
(Fenugreek spinach Recipes)
கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் வெவ்வேறு சுவையை கொண்டுள்ளன. மேலும் எல்லா கீரைகளுமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் வெந்தயக் கீரையும் நமக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.
இந்த வெந்தயக் கீரையானது குளிர்காலத்தில்தான் அதிகமாக கிடைக்கும். இந்த கீரை இயல்பாகவே சிறிதளவு கசப்புத்தன்மை கொண்டது. ஆகவே நம்மில் பல பேர் இந்த கீரையை சமைக்காமல் ஒதுக்கி வைக்கிறார்கள். இந்த கீரையில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன.
பருவங்களின் மாற்றத்தால் நமக்கு செரிமான பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். ஆகவே இந்த குளிர்காலத்தில் அதை சரி செய்வதற்கு வெந்தயக்கீரை சிறந்த தேர்வாகும். அஜீரணம் உள்ளிட்ட பிரச்னைகளை சமாளிக்க வெந்தயகீரை உதவுகிறது. வெந்தயக் கீரையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நீரழிவு உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஒரு வரப் பிரசாதமாகும். எல்லா காலத்திற்கும் எல்லா வயதினருக்கும் ஏற்றது இந்த வெந்தயக்கீரை.
இதை சாம்பாரில் போடலாம், குழம்பும் வைக்கலாம். இந்த கீரையை வைத்து கசப்பே தெரியாத படிக்கும் சில உணவுகளை செய்யலாம். இப்பதிவில் வெந்தயக்கீரை பரோட்டா மற்றும் மேத்தி மட்டர் மற்றும் பைகன் கலந்த சப்ஜி இந்த இரண்டு உணவின் ரெசிப்பையை பார்க்கலாம்.
வெந்தயக் கீரை பரோட்டா:
வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி பிறகு நன்றாக கழுவி கோதுமை மாவோடு கலந்து உப்பு, சிறிதளவு ஓமம், மஞ்சள் தூள் மிளகாய் தூள் கலந்து தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி மாவை பிசைந்து பிறகு அதில் பரோட்டா செய்து நெய் அல்லது எண்ணெயை தடவி பொன்னிறத்தில் வேக வைத்து எடுத்தால் மேத்தி பரோட்டா சுடச் சுட சூப்பராக இருக்கும்.
மேத்தி மட்டர் மற்றும் பைகன் கலந்த சப்ஜி:
முதலில் 250 கிராம் வெந்தயக் கீரையை ஆய்ந்து, பிறகு பொடியாக நறுக்கி நன்றாக கழுவி அதை குக்கரில் போட்டு சிறிதளவு உப்பையும் தண்ணீரையும் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
கீரை வெந்ததும் தண்ணீரை வடிகட்டி கீரையை எடுத்துக் கொள்ளவும். அந்த தண்ணீரை கீழே ஊற்றாமல் ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கடுகு சீரகம் மற்றும் சோம்பை போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் நான்கைந்து பல் பூண்டையும் போட்டு வதக்கவும். வதங்கிய பிறகு இரண்டு கத்திரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போடவும். ஒரு கைப்பிடி அளவு பச்சை பட்டாணியையும் போடவும். மஞ்சள் தூளையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். சிறிதளவு வதக்கிய பிறகு எடுத்து வைத்துள்ள வெந்தயக் கீரையை வேகவைத்த நீரை சேர்க்கவும்.
கத்திரிக்காய் நன்றாக வேகும்வரை வதக்கவும். கத்திரிக்காய் நன்றாக வெந்த பிறகு வேகவைத்துள்ள வெந்தயக்கீரையையும் சேர்க்கவும். பிறகு சிறிதளவு மிளகாய் தூளையும் கரம் மசாலா தூளையும் சேர்த்து வதக்கவும். எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்த பின் அடுப்பை அணைத்துவிடவும். சுவையான மேத்தி மட்டர் பைகன் சப்ஜி ரெடி... இதை நீங்கள் சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
இதைப்போல பரோட்டா, சப்ஜி போன்ற உணவுகளை வெந்தயக்கீரையில் செய்யும்போது கசப்புதன்மை தெரியாது குழந்தைகளும் ருசித்து உண்பார்கள்.