
பண்டிகை தினங்களில் செய்யப்படும் சிறப்பு உணவுகளில் தெய்வீக மணம் கமழும் என்பார்கள். அப்படி கணவர் நலம் காக்க பெண்கள் இருக்கும் திருவாதிரை நாளன்று செய்யப்படும் திருவாதிரைக் களியும் கச்சாயமும் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
திருவாதிரைக் களி
தேவை:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம்- 2 கப்
தண்ணீர்- 6 கப்
நெய்- 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல்- 2 ஸ்பூன்
உப்பு- சிட்டிகை
செய்முறை:
முதல் நாள் இரவே பச்சரிசியை நன்றாக கழுவி காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த நாள் காய்ந்த பச்சரிசியை ஒரு கடாயில் சேர்த்து வறுக்கவேண்டும். அரிசி சிவந்து மணம் வரும் வரை நன்றாக வறுத்து தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். பிறகு அதே கடாயில் பாசிப்பருப்பை சேர்த்து அதையும் வறுத்து அரிசியுடன் சேர்த்து ஆறவிட வேண்டும்.
அடிகனமான பாத்திரத்தில் நன்கு பொடித்த வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு போல காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. வெல்லம் தண்ணீரில் நன்கு கரைந்து வந்தால் போதும். இப்போது ஏற்கனவே வறுத்து ஆறவைத்துள்ள அரிசி ,பருப்பை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
அதே அடிகனமான பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து ஐந்து கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இதனுடன் நாம் கரைத்து வைத்திருக்கும் வெல்லத் தண்ணீரையும் வடிகட்டி சேர்க்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல் மற்றும் உப்பு இதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இந்த தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறிவிடவும். அரிசி நன்கு வெந்து வரும் வரை இதனை கிளறி விடவேண்டும்.
அரிசி ஓரளவு வெந்து வந்ததும் இதனை குக்கருக்கு மாற்றிவிடலாம். குக்கரின் அடிப்பகுதியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஸ்டாண்ட் வைத்து வேறொரு பாத்திரத்தில் களியை போட்டு மூடி இரண்டு விசில் வரும் வரை வைத்து விசில் அடங்கியதும் எடுக்கவும்.
இப்போது ஒரு கடாயில் நெய் சேர்த்து பொடித்த முந்திரியை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். இதனூடன் நாம் குக்கரில் வேகவைத்து எடுத்த களியை சேர்த்து தட்டிய ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். களி ஒட்டாமல் சுருண்டு வந்ததும் இதனை இறக்கிவிடவும்.
அரிசிக் கச்சாயம்
தேவை:
இட்லி அரிசி - 2 கப்
தேங்காய்த் துருவல் - 1 கப்
ஏலக்காய் - 10
வெவ்லம் - 1 கப்
வெந்தயம் -1டீஸ்பூன்
முழு கோதுமை - 1 கைப்பிடி
உளுந்து - 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை:
இட்லி அரிசியை உளுந்து, கோதுமை, வெந்தயத்துடன் சேர்ந்து 6 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் பொடித்த வெல்லத்தை சிறிது சிறிதாக போட்டு மைய அரைக்கவும். நைசாக அரைத்ததும் அதில் தேங்காய் துருவலையும் ஏலக்காய் பொடியையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்த கலவை கெட்டியான தோசைமாவு போல் இருக்க வேண்டும். தளர இருக்கக் கூடாது.
இப்போது அடுப்பில் தேவையான எண்ணெயை ஊற்றி ஒரு குழி கரண்டினால் மாவை அவ்வப்போது கிளறிவிட்டு சிறு சிறு அப்பமாக ஒன்று மேல் எழுந்ததும் அடுத்ததை ஊற்றி எடுக்கவேண்டும். இதில் முழு கோதுமை இல்லை எனில் சிறிது கோதுமை மாவை கலந்து கொள்ளலாம்.