
ரவா தோசை மாவுடன் இரண்டு ஸ்பூன் கடலைமாவு கலந்து தோசை வார்த்துப் பாருங்களேன். தோசை சுவை பிரமாதமாக இருக்கும்.
பொரி உருண்டை, வேர்க்கடலை உருண்டை முதலியவற்றை தயாரிக்கும்போது கையில் சிறிது எண்ணெயோ, நெய்யோ தடவிக்கொள்ளுங்கள். உருண்டை ஈஸியாக பிடிக்க வரும்.
பூரிக்குத் தொட்டுக்கொள்ள கிழங்கு மசால் செய்யும்போது மற்ற பொருட்களுடன் பொட்டுக்கடலை பொடியை சிறிதளவு சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.
சாம்பாரில் உப்பு அதிகமானால் வறுத்து அரைத்த அரிசிமாவு, பொட்டுக்கடலை மாவு இவை இரண்டில் ஏதாவது ஒன்றச் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கலாம். உப்பு மட்டுப்படும்.
சப்பாத்தி, பூரி போன்ற பலகாரங்களுக்கு குருமா செய்யும்போது கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிளுடன், பப்பாளிக்காயையும் தோல் சீவி பொடியாக நறுக்கிச் சேர்த்துப்பாருங்களேன். குருமா வித்தியாசமான சுவையில் அசத்தும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது சிறிதளவு சோம்பைத்தூள் செய்து தூவலாம். வறுவலின் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்.
மெதுவடை செய்யப்போறீங்களா? அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன், ஊறவைத்த பயத்தம் பருப்பை சிறிதளவு கலந்து வடை சுட்டெடுங்கள். வடை மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும்.
கடலைமாவுடன் நான்கில் ஒரு பங்கு பொட்டுக்கடலை மாவு சேர்த்துச் செய்தால் பக்கோடாவின் சுவையே அலாதிதான்.
ஓமப்பொடி செய்யும்போது இரண்டு பங்கு கடலை மாவுக்கு ஒரு பங்கு அரிசிமாவு சேர்த்துச் செய்தால் பக்குவமாக வரும்.
நெல்லிக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி, நல்லெண்ணெயில் நன்றாக வதக்கி, புதினாத் துவையல் அரைக்கும்போது, அதனுடன் சேர்த்து அரைத்தால் நெல்லிக்காய் சுவையுடன் புதினா துவையல் ரெடி.
எந்தப்பதத்தில் அரைத்தாலும் இட்லி பூ போல வரவில்லையா? கவலை வேண்டாம். கழுவி ஊறவைத்த அரிசியுடன் ஒரு டம்ளருக்கு நான்கு ஸ்பூன் என்ற விகிதத்தில் உடைத்த கடலையை சேர்க்கவும். எப்போதும்போல அரைத்து இட்லி சுட்டால் பஞ்சு போன்ற இட்லி தயார்.
கெட்டித்தயிர் வேணுமா? பாலினை வழக்கத்தைவிட பத்து நிமிடங்கள் கூடுதலாக கொதிக்க விடவேண்டும். பின்பு ஆறவிட்டு அதில் உறைமோர் சேர்த்தால் கெட்டியான தயிர் கிடைக்கும்.