
தேங்காய் சட்னி மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால் சுவையான ராய்த்தா தயார்.
எலுமிச்சை ஊறுகாய் துண்டுகள் தீர்ந்து விட்டால், மீதமுள்ள பேஸ்ட்டில் கேரட்டை துண்டுகளாக்கிப் போட்டு ஊறவையுங்கள். பிறகு தயிர் சாதத்துடன் சாப்பிடுங்கள். சுவையாக இருக்கும்.
வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கள் முற்றலாக இருந்தால் தூக்கி எறியவேண்டாம். அவற்றை துண்டுகளாக்கி, தண்ணீரில் போட்டு கொதிக்க விடுங்கள். பிறகு வடி கட்டி, உப்பு, மிளகு, சீரகப்பொடி சேர்த்து சூப்பாக அருந்தலாம்.
பால் முறிந்துவிட்டால், முறிந்த பால் ஆறிய பின் மிக்ஸியிலிட்டு ஓட்டுங்கள். பிறகு உறை வையுங்கள். பால் நன்றாக உறைந்து எந்த வித வேறுபாடும் இல்லாமல் நன்றாக இருக்கும்.
குருமா, கிரேவி வகைகளில் காரம் அதிகமாகி விட்டால், வாணலியில் ஊற்றி, ஒரு டம்ளர் காய்ச்சின பாலை சேர்க்கவும். பிறகு கரண்டியால் நன்கு கலக்கி விட்டால் காரம் வெகுவாக குறைந்திருக்கும்.
பருப்புவடை மீந்துவிட்டால் மறுநாள் வடை கறி செய்யலாம். அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கிளறி இறக்க உசிலி சுவையாக இருக்கும்.
பொரியல் செய்யும்போது உப்பு அல்லது காரம் அதிகமாகி விட்டால், சிறிது ரஸ்க் பொடியைத் தூவிக்கிளறினால், சரியாகி விடுவதுடன் சுவையும் நன்றாக இருக்கும்.
கொத்தமல்லித் தழையை ரசத்தில் போட்டுவிட்டு தண்டை வீணாக்காமல் காயவைத்து, ரசப்பொடியில் சேர்த்து அரைக்கவும். ரசப்பொடி வாசனையாக இருக்கும்.
சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரிக்கலாம்.
காலிஃப்ளவரை சமையலுக்காக பயன்படுத்தம்போது அதன் தண்டுகளை வீணாக்க வேண்டாம். சாம்பாருக்கு போடும் காய்களுடன் அந்தத் தண்டுகளையும் போடலாம்.
உருளைக்கிழங்கை வேகவைத்த பின்பு உரித்தெடுக்கும் தோலை தூக்கி எறிந்து விடாதீர்கள். அதைக்கொண்டு வெள்ளித்தட்டு, விளக்கு போன்றவற்றைத் தேய்த்தால் பளிச்சென்று மின்னும்.
குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், கொஞ்சம் அரிசியை வறுத்து நைசாக அரைத்துக்குழம்பில் கலந்துவிட்டால் அதிகப்படியான உப்பு குறைந்துவிடும்.