
டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு கஞ்சி. புரோட்டின் சக்தி நிறைந்துள்ள இந்த கஞ்சியை காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் உடல் எடையும் வேகமாகக் குறையும்.
பச்சைப் பயறு கஞ்சி:
பச்சைப்பயிறு ஒரு கப்
மட்டரிசி அரை கப்
கேரட் 1
வெள்ளரிக்காய் பாதி
சின்ன வெங்காயம் 6
பூண்டு 4 பற்கள்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
அரிசி, பச்சைப்பயிறு இரண்டையும் நன்கு நீரில் கழுவி 4 கப் தண்ணீர்விட்டு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் வெந்தயம், தேவையான உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு இறக்கவும். பிரஷர் இறங்கியதும் கனமான கரண்டி அல்லது மத்து கொண்டு நன்கு மசித்து தேவையான நீர் கலந்து பருக மிகவும் ருசியான சத்து மிகுந்த பச்சை பயறு கஞ்சி தயார்.
கொள்ளு கஞ்சி:
இது ஒரு சிறந்த வெயிட் லாஸ் கஞ்சி ஆகும்.
கொள்ளு பொடி 2 ஸ்பூன்
தண்ணீர் இரண்டு கப்
சிவப்பு அவல் ஒரு ஸ்பூன்
சீரகம் 1/4 ஸ்பூன்
வெந்தயம் கால் ஸ்பூன்
உப்பு தேவையானது
மோர் ஒரு கப்
கொள்ளு (1கப்), சிவப்பு அவல் (1/4 கப்) இரண்டையும் வெறும் வாணலியில் ஒரு கப் அளவில் எடுத்து வறுத்து வைத்துக் கொள்ளவும். சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் சமயம் கஞ்சி தயாரிக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கும்போது பொடித்த கொள்ளுப்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். அதில் பொடித்த வெந்தயம், சீரகம் சிறிது சேர்த்து கொள்ளு நன்கு வெந்ததும் இறக்கி தேவையான அளவு உப்பு, ஒரு கப் மோர் சேர்த்து கலந்து பருகவும். ருசியான கொள்ளு கஞ்சி சாப்பிட உடல் எடை குறைந்து சிக்கென இருக்கலாம்.
கேரள சம்மந்தி:
கறிவேப்பிலை 1/2 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
மாங்காய் சதைப் பகுதி 1/4 கப்
உப்பு தேவையானது
காய்ந்த மிளகாய் 6
சின்ன வெங்காயம் 4
இந்த துவையலுக்கு வறுக்க வேண்டிய அவசியம் இல்லை. பச்சையாகவே கருவேப்பிலை, தேங்காய்த் துருவல், உப்பு, புளி அல்லது மாங்காய் சதைப் பகுதி, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுத்து உருட்டி வைக்கவும்.
கஞ்சியுடன் இந்த மாங்காய் சம்மந்தி பொருத்தமாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!