
சப்ஜி (Vegetable Sabji) என்பது காய்கறிகள் கலந்த உணவை குறிக்கும் ஹிந்தி/உருது வார்த்தையாகும். இது பொதுவாக மசாலா பொருட்களுடன் சமைக்கப்பட்ட காய்கறிகள் கொண்ட பக்க உணவை (side dish) குறிக்கும். இதனை சப்பாத்தி, பூரி போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம். காய்கறிகளை விரும்பாத குழந்தைகள் கூட மசாலா பொருட்கள், பன்னீர் சேர்த்து தயாரிக்கப்படுவதால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையானவை:
கேரட் - 1
பீன்ஸ் - 10
உருளைக்கிழங்கு - 1
பட்டாணி - 1/4 கப்
குடைமிளகாய் - பாதி
தக்காளி - 2
வெங்காயம் - 1
கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தனியா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையானது
பன்னீர் - விருப்பப்பட்டால்
செய்முறை:
கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி தனியாக வைக்கவும்.
விருப்பப்பட்டால் பன்னீர் துண்டுகளை வாணலியில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு பொன் நிறமாக வறுத்தெடுத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, தேவையான உப்பு, தனியா தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் தனியாக வதக்கி எடுத்து வைத்துள்ள காய்கறிக் கலவையையும், பன்னீர் துண்டுகளையும் சேர்த்துக் கலந்து 2 கப் தண்ணீர் விட்டு, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும். கடைசியாக கஸ்தூரி மேத்தி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.
இதனை சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். சூடான சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.