
வாழைத்தண்டு சட்னி
தேவை:
நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
வற மிளகாய் - 4
புளி- சிறிதளவு
பெருங்காயத்தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மறுபடியும் சிறிது எண்ணெய்விட்டு, வாழைத்தண்டை ஒரு நிமிடம் வதக்கிக்கொள்ளவும். வறுத்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் பொடித்து அதில் வாழைத்தண்டு, உப்பு, புளி சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சுவையான வாழைத்தண்டு சட்னி தயார்.
வாழைத்தண்டு மோர் கூட்டு
தேவை:
வாழைத்தண்டு - 2
தேங்காய் துருவல் - அரை கப் புளித்த மோர் - 2 கப்
கடுகு - அரை ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிது
வற மிளகாய் - 2
உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை:
வாழைத்தண்டை நறுக்கி நார் எடுக்கவும். சிறு துண்டுகளாக நறுக்கவும். வாழைத்தண்டை மஞ்சள் பொடி சேர்த்து, அளவாக நீர் விட்டு வேக வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், மிளகாயை அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து வெந்த வாழைத்தண்டை போட்டு அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். மோரை ஊற்றி கிளறி, இறக்கினால் சுவையான வாழைத்தண்டு மோர் கூட்டு தயார். டிபனுக்கும் தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
வாழைத்தண்டு இட்லி
தேவை:
இட்லி மாவு – 2 கப்,
இளம் வாழைத்தண்டு – 1, உப்பு – அரை டீஸ்பூன்.
தாளிக்க:
நெய் – ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை ஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிது
செய்முறை:
வாழைத்தண்டை நார் நீக்கி மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் புரட்டி ஆறவிடவும். இதை இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, வழக்கமான இட்லி போல் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சுவையான, சத்தான வாழைத்தண்டு இட்லி தயார்.
வாழைத்தண்டு முறுக்கு
தேவை:
வாழைத்தண்டு – 1,
அரிசி மாவு – 2 கப்,
கடலை மாவு – 2 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்,
வெண்ணெய் – 50 கிராம்,
எள் – ஒரு டீஸ்பூன்,
ஓமம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
வாழைத்தண்டை சுத்தம் செய்து சிறுசிறு துண்டாக வெட்டிக்கொண்டு மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு அனைத்தையும் ஒன்றாகப் பாத்திரத்தில் போடவும்.
அதில் வெண்ணெய், எள், ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளவும்.
இதனுடன் வாழைத்தண்டுச்சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பிறகு இதில் ஒரு டீஸ்பூன் சூடு செய்த எண்ணெயைச் சேர்த்து பூரி மாவுப் பதத்திற்கு பிசையவேண்டும். கடாயில் தேவையான எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி மாவை முறுக்குகளாக பொரித்து எடுக்கவும்.. மொறு மொறு வாழைத்தண்டு முறுக்கு ரெடி.