
பலாச்சுளைகளை சாப்பிட்டதும், அதன் கொட்டைகளை தூக்கி எறியாமல், அவற்றிலும் பலவித உணவுகள் சமைக்கலாம்.
பலாக்கொட்டை பாயாசம்
தேவை:
பலாக்கொட்டை - 12
பசும்பால் - 2 கப்
முந்திரி - 8
சர்க்கரை - 1 கப்
குங்குமப்பூ - சிறிது
நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பலாக்கொட்டைகளையும், முந்திரியையும் வேகவைத்து, பலாக்கொட்டைகளின் தோல் நீக்கி, காய்ச்சிய பால் சிறிது விட்டு, மிக்ஸியில் நைசாக அரைக்கவும். மீதி உள்ள பாலில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவைத்து இறக்கி, பாலில் கரைத்த குங்குமப்பூவை சேர்த்தால், பலாக்கொட்டை பாயாசம் தயார்.
பலாக்கொட்டை பொரியல்
தேவை:
பலாக்கொட்டை - 12
தனியா தூள் - 1 ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - 2 ஸ்பூன்
தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பலாக்கொட்டைகளை வேகவைத்து, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெந்த பலாக்கொட்டைகளையும், உப்பு, மிளகு சீரகத்தூள், தனியா தூள் போட்டுக் கலந்து, கிளறி இறக்கி வைக்கவும். புதுவித பலாக்கொட்டை பொரியல் தயார்.
பலாக்கொட்டை வடை
தேவை:
பலாக்கொட்டை - 12
கடலைப்பருப்பு - அரை கப்
மிளகு, சீரகத்தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
கடலை பருப்பை ஊறவைத்து, அரைக்கவும். பலாக்கொட்டைகளை வேகவைத்து, தோல் நீக்கி, மசிக்கவும். அரைத்த கடலைப்பருப்பு, வெந்த பலாக்கொட்டை, உப்பு, பெருங்காயத்தூள், மிளகு சீரகத்தூள் ஆகியவற்றைக் கலந்து பிசைந்து, வடைகளாக தட்டி, வாணலியில் காய்ந்த எண்ணெயில் போட்டு, சிவக்க பொரித்தெடுக்கவும். மொறு மொறு பலாக்கொட்டை வடை தயார்.
பலாக்கொட்டை கட்லெட்
தேவை:
பலாக்கொட்டை – 12
பெரிய வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 2
இஞ்சி துருவல் – அரை ஸ்பூன்
ரஸ்க் தூள் – அரை கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பலாக்கொட்டைகளை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கவும். மசித்த பலாக்கொட்டைகள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு எல்லாவற்றையும் கலந்து, பிசைந்து வடை போல் தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்ததும் எடுத்தால், புதுவகை பலாக்கொட்டை கட்லெட் தயார்.