
தக்காளி சாதம் செய்யும்போது அதில் சிறிதளவு வெந்தயம் ஒரு துண்டு மஞ்சள் ஒரு துண்டு பெருங்காயத்தை வாணலியில் வறுத்து பொடித்து போடவேண்டும் சில பூண்டு பற்களையும் சிறிதளவு எண்ணெயில் வதக்கி அரைத்து தக்காளி சாதத்தில் கலக்கலாம் சூப்பராக இருக்கும்.
புளியோதரை புலவு தக்காளி சாதம் தயாரிக்கும்போது சாதங்களை கலக்கும்போது ஒரு ஸ்பூன் வெண்ணையை சேர்த்து கலந்து பாருங்கள் சாதம் கட்டி கட்டியாக இல்லாமல் இருப்பதுடன் சுவையும் கூடும்.
தயிர் சாதம் கலக்கும்போது வெள்ளரி பிஞ்சு கேரட்டை துருவி கலந்து விடுங்கள் வாசனைக்கு ஒரு மாவடுவை நறுக்கி துண்டாக்கி சேர்ககலாம்.
வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது அரிசியுடன் காய்கறிகளை வேகவைக்க கூடாது. மசாலாவை அரைத்து நெய்யில் வதக்கி அதில் அரிசியை சமைக்க வேண்டும். காய்களை மிக மெல்லியதாக நறுக்கி தனியாக வதக்கி உப்பு சேர்த்து குறைந்த தீயில் சமைத்து பிறகு வெந்த அரிசியுடன் சேர்த்து வெயிட் போடாமல் சிம்மில் வைக்க வேண்டும்.
தேங்காய் சாதம் செய்யும்போது அதில் சிறிது வெள்ளை எள்ளு வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
புளியோதரை செய்ய புளிக்காய்ச்சல் செய்யும்போது புளி கரைசல் கொதிக்கும் வேளையில் வேகவைத்த சென்னா கொஞ்சம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
வெண்பொங்கல் செய்த பின் காராபூந்தி ஒரு கைப்பிடி அளவு இருநூறு கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கு தோலை உரித்து உதிர்த்து போட்டு நெய்விட்டு கிளறி சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.
பிரியாணி புலாவ் போன்றவை தயாரிக்கும்போது அதற்காக சூடாக்கும் எண்ணெயில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து விட்டால் பிரியாணி நல்ல நிறமாக இருக்கும் எண்ணெயில் சர்க்கரை முழுமையாக கரைந்த பின்பே மற்ற பொருட்களை அதில் கொட்ட வேண்டும்.
பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிர் உதிராக இருக்கும்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது இஞ்சி பச்சை மிளகாய் உப்பு மூன்றையும் முழுதாக அரைத்து தாளிப்பில் போட்டு வதக்கிவிட்டு கிளறினால் சுவை வித்தியாசமாக இருக்கும்.
எலுமிச்சை சாதம் கிளறுவதுபோல நார்த்தங்காயிலும் சாதம் கிளறலாம். நார்த்தங்காயின் மேல் துணி வைத்துக்கொண்டு சாறு பிழிய வேண்டும் சாற்றில் தோலில் உள்ள எண்ணெய் விழுந்தால் சாதம் கசந்துவிடும் துணி வைத்து பிழிவதால் தோலில் உள்ள எண்ணெயை துணி இழுத்துக் கொண்டுவிடும்.
புளியோதரை செய்யும்போது புளிக்காய்ச்சல் காய்ச்சும்போது நான்கு ஸ்பூன் கசகசாவை வறுத்து பொடித்து சேர்த்தால் சுவை கூடும் சிறிது வெல்லம் சேர்த்தாலும் புளிக்காய்ச்சல் சுவை கூடும்.
கொத்தமல்லி தழை புதினா கருவேப்பிலை இவற்றை பச்சையாகவே மிக்சியில் அரைத்து சாதத்தில் பிசைந்து சத்தான கீரை சாதம் தயாரிக்கலாம்.
முருங்கை இலையை கொத்தாக எண்ணெயில் பொரித்து இலைகளை உதிர்த்துக் கொண்டு அத்துடன் வறுத்த மிளகு சீரகம் பெருங்காயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கி நெய் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சாதம் சுவையாக இருக்கும்.