
கடலைப்பருப்பு உப்புமா
தேவை:
கடலைப்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 3 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - அரை கப்
தாளிக்க - கடுகு உளுந்தம் பருப்பு, வரமிளகாய் 2, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
கடலை பருப்பு, பச்சரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்துவிட்டு, இட்லி மாவு பதத்தில் கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்து, இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து, உதிர்த்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, வரமிளகாய், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, தேங்காய்த் துருவலை போட்டு வதக்கி, உதிர்த்து வைத்துள்ள கடலைப்பருப்பை போட்டுக்கிளறி இறக்கி வைக்கவும். சுவையான கடலைப் பருப்பு உப்புமா தயார்.
பாசிப்பருப்பு உப்புமா
தேவை:
பாசிப்பருப்பு - 1 கப்
தேங்காய்த் துருவல் - அரை கப்
வர மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - 1
முந்திரிப் பருப்பு - 5
நெய் - 2 ஸ்பூன்
தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
பாசிப்பருப்பை ஒருமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, நீரை வடித்து விட்டு, இட்லி மாவு பதத்தில் கெட்டியாக அரைக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து மாவை இட்லி தட்டில் நிரப்பி, ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் எடுத்து, ஆறியதும், உதிர்த்து வைக்கவும். வாணலியில் நெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, முந்திரிப் பருப்பை சேர்த்து வறுக்கவும்.. நறுக்கிய வெங்காயத்தை வதக்கி உதிர்த்த பாசிப்பருப்பை சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையான பாசிப்பருப்பு உப்புமா தயார்.
துவரம் பருப்பு உப்புமா
தேவை:
பச்சரிசி - 2 கப்
துவரம் பருப்பு அரை கப்
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
தாளிக்க - கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை பெருங்காயத்தூள் தூள்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசியை நீரில் களைந்து, நீரை வடித்து விட்டு, நிழலில் உலர்த்தவும். துவரம் பருப்பை வாணலியில் வறுத்து வைக்கவும். உலர்ந்த பச்சரிசியையும் வறுத்த துவரம் பருப்பையும், ரவை போல உடைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி உப்பு சேர்த்து, அளவாக நீர் ஊற்றவும். நீர் கொதிக்கும்போது, துவரம் பருப்பு அரிசிரவையை போட்டுக்கிளறி, நன்கு வெந்ததும், இறக்கி வைக்கவும். சுவையான துவரம் பருப்பு உப்புமா தயார்.
பச்சைப் பயறு உப்புமா
தேவை:
பச்சைப் பயறு – 1 கப்,
நறுக்கிய வெங்காயம் - 1
தாளிக்க – கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை. பெருங்காயத்தூள்
வரமிளகாய் – 2 ,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப்பயறை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயத்தை வதக்கி, 2 கப் நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, கொதிக்க வைக்கவும். அதில் வறுத்த பயறைப் போட்டு, நன்கு வெந்ததும், இறக்கி வைக்கவும். கமகம பச்சைப்பயறு உப்புமா தயார்.