
உளுந்து மாவு பூரி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
உளுந்து - 1 கப்
ரவை- 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் -1 தேக்கரண்டி
மஞ்சத்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சி விழுது - சிறு துண்டு
செய்முறை:
உளுந்தை கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊறிய உளுந்துடன் பச்சை மிளகாய், இஞ்சி துண்டு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரப்பு இல்லாமல் மை போல நன்கு அரைத்துக் எடுத்துக்கொள்ளவும்.
இந்த உளுந்துமாவுடன் கோதுமை மாவு, ரவை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், உப்பு சிறிதளவு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் மாவு பிசையும்போது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது. பிசைந்த மாவை சிறு சிறு துண்டுகளாக உருட்டி வைக்கவும். மாவு உருண்டைகளை சப்பாத்தி பலகையில் இட்டு தேய்த்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதை கொதிக்கும் எண்ணெயில் இட்டு பொரிந்து வந்ததும் எடுத்துக் கொள்ளவும்.
கடலைக் குழம்பு
தேவையான பொருட்கள்;
பச்சை வேர்க்கடலை - 100 கிராம்,
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 மேசைக் கரண்டி
கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி தழை - நறுக்கியது
செய்முறை:
வேர்க்கடலையை கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைத்து பிறகு குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கவும், அதற்கு பிறகு தக்காளியை பச்சை வாடை போக நன்கு வதக்கி கொள்ளவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.
அந்தக் கலவையில் தேங்காய் பாலை ஊற்றி கிளறிவிடவும், வேகவைத்த கடலையை அதனுள் சேர்த்து கொதிக்க விடவும், தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். சில நிமிடங்களில் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும்.
சுவையான உளுந்து மாவு பூரிக்கு தொட்டுக்கொள்ள கடலைக் குழம்பு சிறந்ததாக இருக்கும். உளுந்து மாவு பூரி சிறிது காரமாக இருக்கும் என்பதால் குழம்பு இல்லாமல் கூட சாப்பிடலாம். கடலைக் குழம்பு பூரிக்கு மட்டுமல்லாமல், இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது. சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.