

உணவுக்கு புளிப்பு சுவையை கொடுக்க பயன்படும் புளியின் வகைகளுள் பழமையான ஒன்று குடம் புளி, கார்சினியா கம்போஜியா என்ற தாவரவியல் பெயர் கொண்ட குலுசியேசியே குடும்பத்தைச் சேர்ந்த மரங்களின் உலர்ந்த பழங்களின் உள்ளிருக்கும் சதைப் பகுதியே கொடம் புளி. இதனை மலபார் புளி என்றும் அழைக்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் விளைகிறது.
இதன் பழத்தில் இருக்கும் எச்.சி.ஏ எனும் ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம் நாம் உண்ணும் உணவிலுள்ள கார்போஹைடிரேட் கொழுப்பாக சேமிக்கப்படாமல் தடுக்கிறது.கேரளாவில் இந்த புளி சமையலில் கடல் சார்ந்த உணவுப் பொருட்களை சமைக்க பயன்படுத்து கின்றனர். இவை செரிமானத்தை தூண்டி, உடலில் இயற்கையாகவே உடல் பருமனை தவிர்க்க உதவுகிறது. மேலும் ஏ.டி.பி சிட்ரேட் எனும் வினையூக்கியை குறைத்து, கொழுப்பு அமிலங்கள் உடலில் படிவதை தடுக்கின்றது.
இளமையில் ஏற்படும் உடற்பருமன் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னை, மகப்பேறின்மை என பல்வேறு நோய்களுக்கு காரணமாகி விடுகிறது. இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்களே எளிதாக உடற்பருமனுக்கு ஆளாகிறார்கள். ஏனெனில் அவர்களின் உடலில் ஏற்படும் அதித ஹார்மோன்களின் ஆதிக்கம். இவைகளே அவர்களின் உடலில் அதிகப்படியான கொழுப்பைச் சேர்த்து உடல் பருமனை அதிகரிக்கிறது.
பெண்களின் உடலில் தேவையின்றி படிந்த கொழுப்புக்களை வெளியேற்றி, அதிக உடல் பருமனை குறைக்கும் அற்புத மூலிகைதான் கொடம் புளி. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. குடம் புளியில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்னும் பைட்டோ கெமிக்கல்கள் அதிக அளவில் உள்ளன. இந்த கெமிக்கல், உடலில் கொழுப்பை சேர்ப்பதற்கு காரணமாக இருக்கும் 'சிட்ரேட் லைஸ்' என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கிறது. இது வயிறு வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் உள்ள இன்சுலின் அளவைச் சீராகப் பராமரிக்கவும் உதவுகிறது. செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டி, உணவு எளிதாகச் செரிக்க உதவுகிறது.
குடம் புளியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்களை வெளியிட உதவுவதன் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும், எலும்புகளை வலுப்படுத்தவும் துணைபுரிகிறது.
உடல் பருமன் உள்ளவர்கள் கொடம் புளி கரைத்த நீர்- 100 மிலி.பாகற்காய் வேகவைத்த நீர் - 100 மிலி.வெந்தயம்-10 கிராம், சீரகம் -10 கிராம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தினமும் ஒருமுறை அதிகாலை வெறும் வயிற்றில் அல்லது மாலையில் குடித்துவர பெண்களுக்கு ஏற்படும் அதிக உடற் பருமன், சினைப்பை நீர்க்கட்டிகள் ஆகியவை நீங்கும்.
குடம் புளி சர்பத் தயாரித்து தினமும் குடித்தால், அதிகப்படியான உடல் எடை குறையும்.100 கிராம் குடம்புளியை இரண்டுமணி நேரம் நீரில் ஊறவைத்து, மிக்சியில் அரைத்து அதனுடன் கால் கிலோ பாகு வெல்லம், ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், கருப்பு உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறிய பின், வடிகட்டி இந்த சாறை , ஒரு டம்ளர் நீருக்கு, ஒரு ஸ்பூன் சேர்த்து தினமும் குடிக்க உடல் எடை குறையும்.
குடம் புளி -10-20 கிராம்,கொள்ளு -10-20 கிராம் இதற்கு ஈடாக 7 முறை தண்ணீர் சேர்த்து இரவு ஊறவைத்து காலையில் அதை கொதிக்கவைத்து வடிகட்டி மிளகு பொடி சுவைக்கு சிறிதளவு உப்பு சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட பெண்களின் PCOD பிரச்னைகள் தீரும்.
பாத வெடிப்புகளால் அவதிப்படுபவர்கள், குடம்புளியுடன் வெண்ணெய் சேர்த்துக் குழப்பி, வெடிப்புள்ள பகுதிகளில் பூசிவந்தால், பளிங்குப் பாதத்தை விரைவில் பார்க்கலாம். சருமச் சுருக்கங்களைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதால், கற்றாழையுடன் சேர்த்து முகத்தில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை தடவி வந்தால் முகப்பொலிவு கிடைக்கும். தேக எரிச்சல், புண், அரிப்பு போன்ற சரும நோய்களுக்கு குடம்புளி வெளிப்பிரயோகமாக பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது.
உடல் அழற்சி நிவாரணியாக குடம் புளி செயல்படுகிறது. குடல் நோய்களால் ஏற்படும் அழற்சிகளிலிருந்து குடம் புளி பாதுகாக்கிறது, இரைப்பை புற்றுநோய் தவிர்க்க உதவுகிறது. குடம்புளியின் பயன்பாடு இந்தியாவில்தான் குறைவு. ஆனால் ஐரோப்பாவில் அதிக பயன்பாட்டில் உள்ளது.