
சர்க்கரைவள்ளி கொழுக்கட்டை
தேவை:
சர்க்கரைவள்ளி கிழங்கு - 2
கோதுமை மாவு - 1 கப் தேங்காய் துருவல் - 1/2 கப் நாட்டு சர்க்கரை - 1/2 டீஸ்பூன் பட்டைதூள் - 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன், நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதன் தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் கோதுமை மாவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு வாணலியில் தேங்காய்த் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு அதனுடன் பட்டைத்தூள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். இப்போது பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறு உருண்டையை எடுத்து நன்றாக விரித்துக் கொள்ளவும் அதில் கலந்து வைத்துள்ள பூரணத்தை வைத்து மடித்துக் கொள்ளவும். ஒரு தோசைக் கல்லில் சிறிதளவு நெய் சேர்த்து தயார் செய்து வைத்துள்ளதை அதில் வைத்து நன்றாக இருப்பக்கமும் வேக வைத்து எடுத்தால் சுவையான, சத்தான சர்க்கரை வள்ளி கிழங்கு கொழுக்கட்டை தயார்.
ஜவ்வரிசி தோசை
தேவை:
ஜவ்வரிசி - கால் கிலோ
பச்சரிசி - ஒரு கப்
தயிர் - 2 ஸ்பூன்
புளித்த மோர் - 2 கப்
உப்பு தேவைக்கேற்ப
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
செய்முறை:
ஜவ்வரிசி, பச்சரிசியை தனித்தனியே இரண்டு மணி நேரம் ஊற வைத்து, அரைத்து, தயிர், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாயை வதக்கி மாவில் சேர்க்கவும். புளித்த மோர் கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து , தோசைகளாக வார்க்கவும். மொறு மொறு ஜவ்வரிசி தோசை ரெடி.
அத்திப்பழ அல்வா
தேவை:
அத்திப்பழம் — 100 கிராம்
பேரீச்சம்பழம் — 50 கிராம்
வெல்லம் — 150 கிராம்
ஏலக்காய்த்தூள் — ஒரு டீஸ்பூன்
பசும் பால் — 200 மி.லி.
நெய் — 6 ஸ்பூன்
முந்திரி — 5
சுக்குத்தூள் — ஒரு ஸ்பூன்
பாதாம் — 5
செய்முறை:
வெது வெதுப்பான நீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்த அத்திப்பழம், பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் நன்கு அரைக்கவும். வாணலியில் நெய்யைச் சேர்த்து 1 ஸ்பூன் நறுக்கிய முந்திரி, பாதாமை நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். அதனுள் காய்ச்சிய பாலைச் சேர்த்துக்கிளறவும். ஓரளவு கெட்டியானவுடன், பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, கலக்கவும். அதனுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, பாதாமைச் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள நெய்யைச் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். சுவையான அத்திப்பழ அல்வா ரெடி.
பீட்ரூட் பஜ்ஜி
தேவை:
கடலைப்பருப்பு – முக்கால் கப்
பச்சரிசி – கால் கப்
பீட்ரூட் – 100 கிராம்
வர மிளகாய் – 4
சீரகம் – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, கடலைப்பருப்பை சுமார் மூன்று மணி நேரம் ஊறவைத்து, பீட்ரூட், எண்ணெய் தவிர மற்ற பொருள்களைச் சேர்த்து, தோசை மாவுப் பதத்தில் அரைக்கவும். பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும். பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் பஜ்ஜிகளாகப் பொரித்து எடுக்கவும். சுவையான பீட்ரூட் பஜ்ஜி ரெடி.