
முத்து தினை தோசை:
கம்பு தோசை அல்லது முத்து தினை தோசை ஆரோக்கியமான புரதம், கார்ப்ஸ், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. அரிசிக்கு ஆரோக்கியமான மாற்றாக உள்ள இதனை காலை அல்லது இரவு உணவாக செய்து ருசிக்கலாம்.
தினை 1கப்
உளுத்தம் பருப்பு 1/4 கப்
புழுங்கல் அரிசி 1/2 கப்
வெந்தயம் அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
நல்லெண்ணெய் தேவையானது
தினை, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து 4 மணி நேரம் நன்கு ஊறவிடவும். பிறகு மிக்ஸியில் ஊற வைத்தவற்றை சேர்த்து தேவையான உப்பு, தண்ணீர் விட்டு அரைக்கவும். ஆறுமணி நேரம் புளிக்கவிட்டு வார்க்க மிகவும் சத்தான ருசியான தோசை தயார்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நன்கு சூடானதும், மாவை மெல்லியதாக ஊற்றி இருபுறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும். புதினா சட்னி அல்லது வெங்காய சட்னியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
முருங்கைக்காய் சூப்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், எலும்புகளை வலுப்படுத்தும், ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் நிறைந்த முருங்கைக்காயில் விட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது.
முருங்கைக்காய் 2
சின்ன வெங்காயம் 6
தக்காளி 1
பூண்டு பற்கள் 4
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
வெண்ணை சிறிது
தண்ணீர் தேவையானது
குட்டி குக்கரில் நறுக்கிய முருங்கைக்காய், பூண்டு பற்கள், சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள், தண்ணீர் இரண்டு கப் விட்டு அடுப்பில் வைக்கவும். இரண்டு விசில் விட்டதும் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியதும் வெந்தத் தண்ணீரை தனியாக வடித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு போன்ற கலவையை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். முருங்கைக்காயை மட்டும் ஸ்பூன் கொண்டு அதன் சதைப் பகுதியை எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வடித்து வைத்த தண்ணீர், அரைத்த விழுது, முருங்கைக்காயின் சதைப்பற்று ஆகியவற்றை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட மிகவும் ருசியான முருங்கைக்காய் சூப் தயார். பரிமாறும் சமயம் அரை ஸ்பூன் வெண்ணெய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சீரகத்தூள் சிறிது தூவி பரிமாற மிகவும் ருசியாக இருக்கும்.
மணிகரம் காரமான வடகம் கறி:
கொங்கு நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான இது துளசி மற்றும் வெற்றிலையில் இருந்து தயாரிக்கப்படும் பதார்த்தம் ஆகும். கொங்கு நாட்டு சமையலின் தனித்துவமான சுவைகளில் ஒன்றாகும்.
அரிசி பருப்பு சாதம்:
அரிசி 1கப்
துவரம் பருப்பு 1/2 கப்
மிளகாய் 4
கருவேப்பிலை
சாம்பார் பொடி 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
எண்ணெய்
வெங்காயம் 1
பூண்டு 10 பற்கள்
தக்காளி 2
அரிசி, பருப்பைக் களைந்து அரைமணி நேரம் ஊறவிடவும். குக்கரில் எண்ணெய்விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். ஒரு கப் அரிசிக்கு 2½ கப் தண்ணீர்விட்டு, தேவையான உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஊறிய அரிசி, துவரம் பருப்பை சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்க அருமையான கொங்கு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் தயார்.
ராகி பக்கோடா:
ராகி மாவு 1 கப்
வேர்க்கடலை 1/4 கப்
வெங்காயம் 2
அரிசி மாவு 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் பொரிக்க
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்விட்டு கெட்டியான பதத்திற்கு பிசையவும். அதிக தண்ணீர் சேர்த்தால் எண்ணெய் குடிக்கும். எனவே கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பிசைந்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் பக்கோடாக்களாக கிள்ளிப்போடவும். பொன்னிறம் ஆனதும் எண்ணெயை வடித்து எடுக்க மிகவும் ருசியான, முறுமுறுப்பான பக்கோடா தயார். இதனை மாலை நேர சிற்றுண்டியாகவோ, டீயுடன் சேர்த்து சாப்பிடவோ மிகவும் ருசியாக இருக்கும்.