
வெள்ளரி விதை பாயசம் (From Payasam to Khara Boli!
தேவை:
வெள்ளரி விதை - அரை கப், பாதாம்பருப்பு - 20,
பால் - 3 கப்,
சர்க்கரை - ஒரு கப், முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் - தேவைக்கேற்ப, ஏலக்காய்தூள் - சிறிதளவு, நெய் - சிறிதளவு.
செய்முறை:
வெள்ளரி விதையை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து எடுத்து, பிறகு இரண்டையும் மிக்ஸியில் பால் விட்டு மை போல அரைத்தெடுங்கள். அதனுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானவுடன் அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவையுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து அதில் போடுங்கள். ஏலக்காய் பொடித்ததையும் போட்டு இறக்கி, மேலே குங்குமப்பூவை தூவினால், சுவையான வெள்ளரி விதை பாயாசம் தயார்.
********
பூசணி விதை மில்க்ஷேக்
தேவை:
பூசணி விதை - 2 டீஸ்பூன்
முந்திரி -4
பாதாம் - 4
ஏலக்காய் - 2
சர்க்கரை - 3 டீஸ்பூன்
காய்ச்சி குளிரவைத்த பசும் பால் - 200 மில்லி
செய்முறை:
பூசணி விதை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பின்பு இதனுடன் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் காய்ச்சி குளிரவைத்த பால் சேர்த்து, மிக்ஸியில் நுரை பொங்க அரைத்து, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்தால் சுவையான பூசணி விதை மில்க் ஷேக் ரெடி.
*******
பலா விதை (பலாக்கொட்டை) கார போளி
தேவை:
பலா விதை - 20,
கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
ஓமம் - 1 டீஸ்பூன்,
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
பொடியாக அரிந்த பெரிய வெங்காயம் - 5 டீஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்,
பொடியாக அரிந்த மல்லித் தழை - 2 டீஸ்பூன்.
எண்ணெய் - 10 டீஸ்பூன்
செய்முறை:
பலா விதைகளை நீர்விட்டு வேகவிட்டு அதிகப்படியாக நீர் இருந்தால் வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சுற்றிய பலாக் விதைகளை போட்டு அனைத்துப் பொருட்களையும் சேர்த்து எண்ணெய் மட்டும் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து மாவினை உருட்டி போளியாகத் தட்டி தவாவில் போட்டு ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு புறமும் வெந்ததும் எடுக்கவும். சுவையான பலா விதை கார போளி தயார்.
********
தாமரை விதை பாயசம்
தேவை:
தாமரை விதை - 1/4 கப்,
பால் - 1/4 லிட்டர்,
சீனி - 1/4 கப்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கிஸ்மிஸ்,
முந்திரி - தலா 10, பாதாம்,
பிஸ்தா - தலா 6,
குங்குமப்பூ - சிறிது,
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்,
ஜாதிப்பூ - 1 சிட்டிகை.
செய்முறை:
ஒரு கடாயில் நெய்யை உருக்கி அதில் தாமரை விதைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். தாமரை விதை மொறு மொறுப்பாகும் வரை அடுப்பை குறைத்து வைத்து வறுத்துக்கொள்ளவும். பாதாம், பிஸ்தா, முந்திரியை கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், சீனி, பொடித்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி பொடி, ஏலக்காய் பொடி, ஜாதிப்பூ சேர்த்து நன்றாகக் காய்ச்சவும்.
இதில் வறுத்து வைத்துள்ள தாமரை விதைகளை கைகளால் உடைத்துப் போடவும். நன்றாக வெந்தவுடன் குங்குமப்பூ மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும்.
வித்தியாசமான சுவையில் தாமரை விதை பாயாசம் ரெடி.