
எனது மராட்டிய தோழி வந்தனா கரேயுடன் பேசிக் கொண்டிருக்கையில், சாப்பாடு பற்றிய விஷயம் வர, மராட்டியர்கள் செய்யும் பாகர்வடி டேஸ்ட்டியாக இருக்கும் எனறேன். உடனே அவள், "ட்ரை ஃப்ரூட் மிக்ஸ் பண்ணி ஸ்பெஷலாக தயாரிக்கும் பாகர்வடி, மிகவும் டேஸ்ட்டியாக இருக்கும். அது தனி லெவல். அத்தகைய ஸ்பெஷல் பாகர்வடியைத் தான் அருமையாக செய்வதுண்டு" என்றவுடன், அந்த ஸ்பெஷல் ட்ரை ஃப்ரூட்ஸ் பாகர்வடி செய்வது பற்றிய விபரங்களைக் கூறுமாறு நான் கேட்க, வந்தனா குறிப்புக்களைப் பகிர்ந்தாள்.
அவை பின் வருமாறு:
தேவை:
நல்ல மைதாமாவு (சலித்தது) - 1 கப்
சலித்த கடலை மாவு - 1 கப்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி- 1 சிட்டிகை
பேகிங் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையானது
வாயகன்ற பாத்திரமொன்றில், மேற்கூறிய அனைத்தையும் போட்டு நன்கு கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, பிறகு மெல்லிய துணி கொண்டு மூடி வைக்கவும்.
ஃபில்லிங் செய்ய தேவையான பொருட்கள்:
துருவிய உலர் தேங்காய் - 1/2 கப்
சீனி 1 டீஸ்பூன்
தனியா பொடி 1/4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 டீஸ்பூன்
காஷ்மீரி சிகப்பு
மிளகாய்ப் பொடி 1 டீஸ்பூன்
ட்ரை மேங்கோ
பவுடர்(ஆம்ச்சூர்) 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
ட்ரை ஃப்ருட்ஸ்
(ஒன்றிரண்டாக ஒடித்தது) 2 கப்
வெள்ளை எள் 2 டீஸ்பூன்
கஸ்-கஸ் 1 டீஸ்பூன்
கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
டொமட்டோ கெட்ச் 5 டீஸ்பூன்
உப்பு தேவையானது
ரீஃபைன்ட் ஆயில் 1/2 லிட்டர்
டொமட்டோ கெட்ச் அப், ரீஃபைன்ட் ஆயில் இவை இரண்டையும் தவிர, மீதி பொருட்களை பெரிய பேஸனில் போட்டு, லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸ் செய்து, சுமார் பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் இவைகளை மிக்ஸியிலிட்டு சற்று கர-கரப்பாக திரித்தெடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:
மிக்ஸ் செய்து வைத்திருக்கும் மைதாமாவு கலவையை சமமாக பிரித்து சப்பாத்திக்கு உருட்டுவதுபோல ஒவ்வொன்றாக சற்று கனமாக இட்டுக் கொள்ளவும்.
டொமட்டோ கெட்ச் அப்பை ஒன்றின் மீது பரவலாக தடவி, அரைத்து வைத்திருக்கும் மசாலா பவுடரையும் சுற்றிவர அதன் மேல் போட்டு மாவை டைட்டாக ரோல் செய்யவும். இதுபோல எல்லாவற்றையும் செய்து வைத்து கொள்ளவும்.
ரோல் செய்ததை, கூரிய கத்தி கொண்டு ஒரு சென்டி மீட்டர் அளவு திக்காக கட் செய்கையில், சுருள் வடிவில் பார்க்க அழகாக இருக்கும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், நான்கு-நான்காக போட்டு இரு பக்கமும் திருப்பிக் கொடுத்து பொன்னிறமாக பொரித்து எடுத்து சாப்பிடுகையில், டேஸ்ட்டியாக இருக்கும் இந்த மராட்டிய ஸ்பெஷல் ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸ்ட் பாகர்வடி. பிக்னிக் செல்கையில் எடுத்து செல்லலாம்.