
கடையில் வாங்குவதை விட பீனட் பட்டர் மற்றும் ஹம்முஸை வீட்டில் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே செய்து விடலாம். பிரட் டோஸ்ட், டிப், சப்பாத்தி, பிரட் போன்றவற்றில் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.
பீனட் பட்டர், ஹம்முஸ் இரண்டும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆரோக்கியமானது மற்றும் அதிக புரதம் நிறைந்தது. அதுவும் வீட்டிலேயே செய்யும் போது எந்த கலப்படமும் இல்லாமல் சுத்தமான முறையில் செய்ய முடியும். வாங்க இன்று இந்த இரண்டு ரெசிபிகளையும் செய்வது எப்படி என்ற பார்க்கலாம்.
1. ஹம்முஸ் :
தேவையான பொருட்கள் :
வெள்ளை கொண்டைக்கடலை - 2 கப்
வெள்ளை எள் - 1 கப்
ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
எலுமிச்சை சாறு - 4 டீஸ்பூன்
தோல் நீக்கிய பூண்டு பல் - 5
செய்முறை :
வெள்ளை கொண்டை கடலையை இரவில் ஊறவைத்து அல்லது 8 மணிநேரம் ஊறவைத்த பின்னர் வேகவைத்து தோலை நீக்கி விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெள்ளை எள்ளை போட்டு கருகாமல் நன்றாக வறுத்து ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு அதனுடம் கால் கப் ஆலிவ் ஆயில் சேர்த்து நைசான பேஸ்ட் போல் அரைக்கவும்.
எள்ளு நைசான பேஸ்ட் போல் அரைந்ததும் அதனுடன் வேகவைத்து தோல் நீக்கிய வெள்ளை கொண்டைக்கடலையை போட்டு அதனுடன் எலுமிச்சை சாறு, பூண்டு, உப்பு, மீண்டும் ஆலிவ் ஆயில் அரை கப் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக 5 ஐஸ் கியூப் சேர்த்து அரைத்தால் நைசாக கிரீமியாக வரும். இதில் ஐஸ் கியூப் அல்லது ஐஸ் வாட்டர் சேர்த்தால் கிரீமியாக வரும். நார்மல் வாட்டர் சேர்க்கக்கூடாது.
இப்போது சூப்பரான ஹம்முஸ் ரெடி. இதன் மேல் சிறிது மிளகாய் தூள் தூவி, ஆலிவ் ஆயில் ஊற்றி பரிமாறவும்.
2. பீனட் பட்டர் :
தேவையான பொருட்கள் :
பச்சை வேர்க்கடலை - 2 கப்
உப்பு- ஒரு பின்ச்
தேன் - 1 டீஸ்பூன்
செய்முறை :
பச்சை வேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு நன்றாக மொறு மொறு என்று வறுத்து ஆறவைத்து ஆறியதும் தோல் நீக்கி கொள்ள வேண்டும்.
தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்சிஜாரில் போட்டு அதனுடன் தேன், உப்பு சேர்த்து அரைக்கவும். அரைக்கும் போது வேர்க்கடலை முதலில் பவுடராகி பின்னர் அதில் இருக்கும் எண்ணெய் வெளியில் வந்து கிரீமி பேஸ்ட் பதத்திற்கு வரும். இதை அரைக்கும் போது பல்ஸ் மோடில் போட்டு, விட்டு விட்டு அரைக்க வேண்டும். அப்போது தான் கிரீமியான பதம் வரும். இப்போது சூப்பரான பீனட் பட்டர் ரெடி. இதை பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.