
கிராமங்களில் அதிகமாக செய்யக்கூடிய பாரம்பரிய பலகாரங்கள்.
கஜூர் பலகாரம்
தேவையானவை
கோதுமை மாவு _2 கப்
ரவை _ ½ கப்
நெய் _2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் _1 கப்
உப்பு _1 சிட்டிகை
சர்க்கரை _1 கப்(நைசாக திரித்தது)
எள் _11/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் _ ½ ஸ்பூன்
எண்ணெய் _பொரிக்க தேவையானது
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமைமாவு எடுத்து அத்துடன் ரவை, எள், நெய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கலந்து விட்டு பொடித்த சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு மாவை இறுக பிடித்து பிடித்து கலந்துவிட்டு பின்னர் சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு உருட்டி 5 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் பெரிதாக ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி கட்டையில் சிறிது கடினமாகவே பரத்தி உருட்டி, டைமன் வடிவத்தில் வெட்டி எண்ணெய் சட்டியில் எண்ணெய் கொதித்ததும் தீயை மிதமாக வைத்து அதில் போட்டு பொறுமையாக பொரித்து திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையான கஜூர் பலகாரம் தயார்.
பாசிப்பருப்பு முறுக்கு
தேவையானவை
பாசிப்பருப்பு _1 கப்
உப்பு _ ½ ஸ்பூன்
பெருங்காயத்தூள் _1/4 ஸ்பூன்
எள் _ 2 ஸ்பூன்
ஓமம் _1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் _ 1 ஸ்பூன்
நெய் _1 ஸ்பூன்
இடியாப்பமாவு _4 கப்
எண்ணெய் _ பொரிக்க தேவையான அளவு
செய்முறை: பாசிப்பருப்பை நன்றாக மணம் வரும் வரை வறுத்து சிறிது ஆறியதும் நன்கு கழுவி 2 கப் தண்ணீர்விட்டு குக்கரில் குழைய வேகவைக்கவும். பின்னர் அதை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு வெண்ணெய் மாதிரி அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன், உப்பு, பெருங்காயத்தூள், எள், ஓமம், நெய், மிளகாய்தூள் சேர்த்து நன்கு கலந்து பிறகு இடியாப்ப மாவு சேர்த்து கையால் நன்கு கலந்துவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து இடியாப்பமாவு பக்குவத்தில் வைத்துக்கொள்ளவும். இடியாப்ப அச்சில் முறுக்கு சில்லைப் போட்டு கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு மாதிரி பிழிந்து ஊற்றி பொறுமையாக மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். மொறு மொறு என்று சுவையான பாசிப்பருப்பு முறுக்கு தயார்.
வாழைப்பழ அல்வா
தேவையானவை;
பழுத்த வாழைப்பழம் _1 கிலோ
வெல்லம் _1/2 கிலோ
கார்ன்ஃப்ளோர் மாவு _1 ஸ்பூன்
நெய் _1/2 கப்
முந்திரிபருப்பு _1 கைப்பிடி
ஏலக்காய்தூள் _1/2 ஸ்பூன்
செய்முறை: முதலில் வெல்லத்தை ½ கப் தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். பின்னர் வாழைப்பழத்தை தோல் உரித்து சிறிதாக வட்டமாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறி கொண்டே இருக்கவும்.
சிறிது கெட்டியாகி வரும்போது வெல்ல தண்ணீரை சேர்த்து கிளறவும். பின்னர் 1 ஸ்பூன் கார்ன்ஃப்ளோர் மாவு சேர்த்து நன்றாக கிளறவும். மாவு கொதித்து வெளியில் தெறிக்காமல் இருக்க மூடிபோட்டு மூடி அடிக்கடி திறந்து கிளறவும். பின் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியாகும் வரை கிளறவும்.நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். மிருதுவான சுவையுடன் வாழைப்பழ அல்வா தயார்.