
பரோட்டா ஆரோக்கியத்திற்கு கெடுதல்னு சொன்னாலும் மொறு மொறுன்னு, லேயர் லேயரா இருந்தா எல்லாருக்குமே பிடிக்கும். அதுல பூண்டோட வாசனையும், சுவையும் சேர்ந்தா எப்படி இருக்கும்? அட்டகாசமா இருக்கும்ல. அதுதான் இந்த கார்லிக் லச்சா பரோட்டா. செய்யறதுக்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ஆனா டேஸ்ட்ல உங்கள நிச்சயம் ஏமாத்தாது. இதுக்கு சைட் டிஷ்ஷே தேவையில்லை, அப்படியே கூட சாப்பிடலாம். வாங்க, இந்த சுவையான லேயர் பரோட்டா எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாவுக்கு:
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - மாவு பிசைய தேவையான அளவு
எண்ணெய்/நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கார்லிக் ஸ்ப்ரெட்க்கு:
பூண்டு - 8-10 பற்கள்
நெய்/வெண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - அரை டீஸ்பூன்.
கொத்தமல்லி இலை - 2 டேபிள் ஸ்பூன்.
உப்பு - ஒரு சிட்டிகை
பரோட்டா சுட:
எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு பெரிய பவுல்ல கோதுமை மாவு, உப்பு சேர்த்து நல்லா கலந்து விடுங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தண்ணி சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு சாஃப்டா, ஆனா ரொம்ப ஒட்டாம பிசைஞ்சுக்கோங்க. கடைசியா ஒரு ஸ்பூன் எண்ணெய்/நெய் தடவி, மாவை ஒரு 15-20 நிமிஷம் மூடி வச்சு ஊற விடுங்க. அப்போதான் மாவு சாஃப்டா வரும்.
இப்போ கார்லிக் ஸ்ப்ரெட் ரெடி பண்ண ஒரு சின்ன பவுல்ல பொடியா நறுக்கின பூண்டு, உருகின நெய்/வெண்ணெய், சில்லி ஃபிளேக்ஸ், நறுக்கின கொத்தமல்லி இலை, ஒரு சிட்டிகை உப்பு எல்லாத்தையும் சேர்த்து நல்லா கலந்து வச்சுக்கோங்க.
ஊற வச்ச மாவை எடுத்து இன்னொரு தடவை லேசா பிசைஞ்சு, சின்ன சின்ன உருண்டைகளா பிரிச்சுக்கோங்க. ஒவ்வொரு உருண்டையையும் மைதா மாவு தூவி, மெல்லிசா ஒரு பெரிய வட்டமா தேச்சுக்கோங்க. எவ்வளவு மெல்லிசா தேய்க்கிறீங்களோ, அவ்வளவு லேயர்ஸ் வரும்.
தேச்ச மாவுக்கு மேல நம்ம ரெடி பண்ணி வச்ச கார்லிக் ஸ்ப்ரெட்ட நல்லா பரவலா எல்லா பக்கமும் தடவுங்க. இப்போ அந்த மாவை ஒரு ஃபேன் மடிக்கிற மாதிரி, அதாவது அக்கார்டியன் மாதிரி மடிச்சுக்கோங்க. மடிச்சதை மெதுவா நீளமா இழுத்து விடுங்க. இப்போ அதை ஒரு நத்தை கூடு மாதிரி சுருட்டிடுங்க. கடைசியா சுருட்டுன முனைய உள்ள அழுத்தி ஒட்டிடுங்க.
சுருட்டுன உருண்டைய உள்ளங்கையில வச்சு லேசா அழுத்தி தட்டி, அப்புறம் மைதா மாவு தூவி, லேசா தேய்க்க ஆரம்பிங்க. ரொம்ப அழுத்தி தேய்க்காம, மெதுவா தேய்ங்க. அப்போதான் லேயர்ஸ் உடையாம வரும்.
இப்போ அடுப்புல ஒரு தோசைக்கல்ல வச்சு நல்லா சூடு பண்ணுங்க. சூடானதும் தேச்சு வச்ச பரோட்டாவ போட்டு, ரெண்டு பக்கமும் எண்ணெய்/நெய் ஊத்தி பொன்னிறமா, மொறு மொறுன்னு லேயர்ஸ் தெரியற வரைக்கும் சுட்டு எடுங்க.
மணமணக்கும், மொறு மொறுப்பான கார்லிக் லச்சா பரோட்டா ரெடி.