

பூண்டு முறுக்கு
பொதுவாகவே வீடுகளில் முறுக்கு சுட்டால் வீடே மணக்கும். அதுவும் குறிப்பாக இந்த பூண்டு முறுக்கு! மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும் மொறு மொறுப்பான பூண்டு முறுக்கு. அதை எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 2 கப்
வறுத்து அரைத்த உளுந்து மாவு – ¼ கப்
வறுத்து அரைத்த பொட்டுக்கடலை மாவு – ¼ கப்
உரித்த பூண்டு – 2 கப்
சிவப்பு மிளகாய் – 20 Nos
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எள் – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
பெருங்காயத் தூள் – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
மிக்சி ஜாரில் மிளகாய், பூண்டு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுதைப் போட்டு, அதில் அரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு மற்றும் பொட்டுக்கடலை மாவை சேர்க்கவும்.
இதனுடன் எள், பெருங்காயத் தூள், தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். அதனுடன் காய்ச்சிய எண்ணெயை சூடாக ஒரு கரண்டி ஊற்றி நன்றாகக் கலக்கவேண்டும்.
பின்னர், கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, மாவு கையில் ஒட்டாத பதத்தில் சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் பிடித்த வடிவத் தட்டை போட்டு, உள்ளே நிரப்பி, சிறு தட்டுகளின் பின்புறம் எண்ணெய் தடவி, அதன் மீது முறுக்கு பிழிந்துவிடவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை மெதுவாக எண்ணெயில் போடவும். மீண்டும் அதே தட்டில் பிழிந்து வைத்துக்கொள்ளலாம்.
முறுக்கு எண்ணெயில் பொரியும்போது வரும் குமிழ்களும் சத்தமும் அடங்கியதும், இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, முறுக்கு பொன்னிறமாக மாறியதும் எடுத்துவிடலாம்.
எடுத்த முறுக்குகளை ஒரு வடிகட்டியில் போட்டு எண்ணெய் வடிந்து முறுக்கு நன்றாக ஆறிய பிறகு, air-tight container அல்லது சம்படத்தில் போட்டு வைத்தால் ஒரு மாதம் வரை மொறு மொறுப்பாகவே இருக்கும்.