

முருங்கைப்பூவை தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வதக்கி, மோர்க்குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால் வாசனை அசத்தும்.
குழம்பில் உப்பு அதிகமானால் சிறிது அரிசியை வறுத்து நைசாக அரைத்து குழம்பில் சேர்த்தால் போதும்.
தேங்காய் சாதம் மற்றும் எலுமிச்சைச் சாதம் போன்ற கலந்த சாதங்களை பரிமாறும் முன், மோர் மிளகாயை பொரித்துப் பொடி செய்து தூவினால் சுவை அள்ளும்.
தக்காளிக்குருமா செய்யும்போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமாவின் சுவை அதிகரிக்கும்.
அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியைக் கலந்து அடையாகத்தட்டி, இட்லித்தட்டில் வேகவைத்தால் சுவை மிகுந்த அடை தயார்.
தோசைமாவு புளித்துவிட்டால், அரைக்கப் பாலில், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, மாவில் சேர்த்து தோசை சுட்டால் முறுகலாகவும், ருசியாகவும் இருக்கும்.
பஜ்ஜி உப்பி வருவதற்கு பஜ்ஜி மாவுடன் சோடா உப்பு சேர்ப்பதற்கு பதில் மிளகுத்தூள், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து சுவையான பஜ்ஜி செய்யலாம்.
மோர்க்குழம்பு செய்யும்போது அடுப்பை குறைவாக வைத்து கொதிக்க வைத்தால் மோர் திரியாமல் இருக்கும்.
வெஜிடபிள் பிரியாணி செய்யும்போது, வேகவைத்த கார்ன் முத்துக்களை சேர்த்து செய்து பாருங்கள். முத்துமுத்தாக அழகாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.
இட்லிப்பொடி தயாரிக்கும்போது வெள்ளை எள் சிறிதளவுடன் ஒரு ஸ்பூன் கொத்துமல்லி விதையை வறுத்து, மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லிப்பொடி வாசனையாக இருக்கும்.
கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகளை நான்-ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடிபிடிக்காமல் எளிதாகக் கிளறலாம்.
ஃப்ரிட்ஜில் வாசனைப்பொருட்களை வைத்தே ஆக வேண்டுமென்றால் அதனருகே இரண்டு ரொட்டித் துண்டுகளை வைக்கவேண்டும். இவை வாசனையை ஈர்த்துக்கொள்ளும்.
சாம்பாரோ, ரசமோ கொதிக்கும்போது, வாசனை வரவில்லையென்றால் அதில் உப்பு குறைவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
பாலில் பேரீச்சம்பழத்தைப் போட்டு ஊறவைத்து மைய அரைத்து கோதுமை மாவில் பிசைந்து சப்பாத்தி செய்தால் சத்தான இனிப்பு சப்பாத்தி தயார்.
கட்லெட் செய்யும்போது பொடியாக நறுக்கிய கீரையைக்கலந்து பிசைந்து பொரித்தால் கட்லெட்டின் சுவையும், சத்தும் அதிகரிக்கும்.
சாலட் செய்யும்போது நீர்த்துப் போனால் பிரட் துண்டுகளை சிறிய துண்டுகளாக வெட்டிச் சேர்த்தால் போதும் கட்டிப்படும்.