

பார்வா டமாட்டர் (Stuffed Tomato) ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.தக்காளிப் பழம் 4
2.உருளைக் கிழங்கு 2
3.வெங்காயம் 1 (பொடிசா நறுக்கிக் கொள்ளுங்கள்)
4.பச்சை மிளகாய் 1(பொடிசா நறுக்கிக்கொள்ளவும்)
5.சீரகம் ½ டீஸ்பூன்
6.சிவப்பு மிளகாய் தூள் ½ டீஸ்பூன்
7.கரம் மசாலா பவுடர் ½ டீஸ்பூன்
8.எண்ணெய் 1-2 டேபிள் ஸ்பூன்
9.உப்பு தேவையான அளவு
10. நறுக்கிய ஃபிரஷ் கொத்தமல்லி இலை 1 கைபிடி
செய்முறை:
உருளைக் கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். தக்காளிப் பழங்களை கழுவி, அதன் மேல் பகுதியை வட்ட வடிவ மூடி போல் நறுக்கி எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும். பின் பழத்தின் உள்ளிருக்கும் சாறு மற்றும் விதைகள் சார்ந்த பகுதியை ஒரு ஸ்பூனால் கவனமுடன் வெளியெடுத்துவிடவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் சீரகம் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய் மற்றும் தக்காளிப் பழங்களிலிருந்து வெளியில் எடுத்த பல்ப் (pulp) ஆகிய வற்றை சேர்த்து கலக்கவும். ஒரு நிமிடம் கழித்து அதனுடன் மசித்து வைத்த உருளைக் கிழங்கு, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா பவுடர் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர்ந்து வருமாறு கிளறி, பிறகு மல்லி இலைகளை தூவி இறக்கவும்.
இவ்வாறு தயாரித்த கலவையை, காலி செய்து வைத்திருக்கும் தக்காளி குடுவைக்குள் நிரப்பி, வெட்டி வைத்திருக்கும் அதன் மூடியை வைத்து மூடவும். பின் ஒரு கடாயை சூடாக்கி அதில் கொஞ்சம் தாராளமாக எண்ணெய் ஊற்றவும். அதில் ஸ்டப் செய்து வைத்துள்ள தக்காளிகளை ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக வைத்து சிறு தீயில் வேகவிடவும். தீயை அதிகரிக்காமல், தக்காளி பக்கவாட்டிலும் மேற்புறமும் வேகும்படி திருப்பி விடவும். ஓவர் குக் ஆகி விடாமல் எட்டு நிமிடங்களில் கடாயிலிருந்து எடுத்துவிடவும்.
பார்வா டமாட்டர் (Bharwa Tamatar) ரெடி. இதை சாலட் அல்லது தயிர் அல்லது பருப்பு சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். கெட் டுகெதர் போன்ற நிகழ்வுகளில் இந்த பார்வா டமாட்டர்களை ட்ரேயில் அடுக்கி வைத்திருப்பது பார்ப்போர் கண்களை கவர்ந்திழுக்கும்.
ஆந்திரா ஸ்டைல் கொத்தவரங்காய் கிரேவி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.கொத்தவரங்காய் 200 கிராம்
2.கொத்தமல்லி விதை 20 கிராம்
3.சீரகம் ¾ டீஸ்பூன்
4.மிளகு ½ டீஸ்பூன்
5.சோம்பு 1 டீஸ்பூன்
6.காய்ந்த மிளகாய் 4
7.பூண்டு 5 பற்கள்
8.கறிவேப்பிலை 2 இணுக்கு
9.வேர்கடலை 2 டீஸ்பூன்
10.தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
11.வெங்காயம் 1
12.தக்காளி 2
13.எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
14.உப்பு தேவையான அளவு
செய்முறை:
கொத்தவரங்காயை கழுவி, ஒரு அங்குல துண்டுகளாக நார் இல்லாமல் உடைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காயைப் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1½ டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் வேர்கடலை, மல்லி விதை, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல், பூண்டு, ஓர் இணுக்கு கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றைப் போட்டு சிறு தீயில் சிவக்க வறுக்கவும். பின் அதை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். தக்காளி வெங்காயத்தை பொடிசா நறுக்கிக் கொள்ளவும்.
பின் கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் சோம்பு மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை சேர்க்கவும். அது சிவந்ததும் நறுக்கிய தக்காளி வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதனுடன் வேகவைத்த கொத்தவரங்காயை சேர்த்துக் கிளறிவிடவும். பின் அரைத்து வைத்த மசாலாவைக் கொட்டி உப்பு போடவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மீடியம் தீயில் வைத்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாயிருக்கும்.