

தட்டைப் பயறு கீரை மசியல்
தேவையான பொருட்கள்:
தட்டைப் பயறு – அரை கப்
கீரை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 4 பல்
தக்காளி (நறுக்கியது) – ½ கப்
சீரகம் – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறு துண்டு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
பால் – ¼ கப்
தேங்காய் எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் கீரையை சுத்தம் செய்து நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். தட்டைப் பயிறை ஒரு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் நன்றாக வே வைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் நறுக்கிய கீரையை சேர்த்து கிளறவும். மஞ்சள் தூள், பால் சேர்த்து 5 நிமிடம் மூடி வேகவிடவும்.
பிறகு மூடியைத் திறந்து கிளறி, வேகவைத்த தட்டைப்பயறு மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் 5 நிமிடம் மூடி வைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து மத்தால் நன்றாக கடையவும்.
(அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று அரைக்கலாம்)
மசியலை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
தட்டைப் பயறு காரக்குழம்பு
தேவையான பொருட்கள்:
தட்டைப் பயறு – 1 கப்
மசாலா வறுக்க
சோம்பு – ½ டீஸ்பூன்
இலவங்கப்பட்டை – 2
பிரிஞ்சி இலை – 1
வரமிளகாய் – 5
ஏலக்காய் – 1
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – ¼ ஸ்பூன்
கசகசா – ¼ ஸ்பூன்
கிராம்பு – 2
வதக்க:
பூண்டு – 10 பல்
தக்காளி (நறுக்கியது) – 1 கப்
சின்ன வெங்காயம் – 1 கப்
தேங்காய் துருவல் – ½ கப்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
தாளிக்க:
பிரிஞ்சி இலை – 1
பட்டை – 2
முந்திரி – 5
பெரிய வெங்காயம் – 2 (நீளமாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
தட்டைப் பயிறை 1 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, மசாலா பொருட்களை லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் வதக்க வேண்டிய பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி ஆறவிடவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு மைய அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரிஞ்சி இலை, முந்திரி சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
ஊறவைத்த தட்டைப் பயறு சேர்த்து கிளறவும். அரைத்த மசாலா, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி 3 விசில் வரவிடவும். இறுதியில் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.