
நெய் கடலை:
நம நமவென்று இருக்கும் வாய்க்கு ஏதாவது கரகரவென்று மென்று கொண்டிருக்கனும்போல் ஆசைப்பட்டால் சட்டென்று நம் ஞாபகத்திற்கு வருவது நெய் கடலைதான்.
கடலைப்பருப்பு கால் கிலோ
பூண்டு 10 பற்கள்
கருவேப்பிலை 2 கைப்பிடி
மிளகாய்த் தூள் 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
சமையல் சோடா 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
கடலைப்பருப்பை சிறிது சமையல் சோடாவுடன் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிடவும். சமையல் சோடா கடலைப் பருப்பை நன்கு மென்மையாக்கும். பொரிக்கும் பொழுது கரகரப்புடன் மிகவும் ருசியாக இருக்கும். நன்கு ஊறிய கடலைப்பருப்பை இரண்டு மூன்று முறை கழுவி நீரை வடிகட்டவும். இதனை ஒரு மென்மையான காட்டன் துணியில் பரப்பிப் போட்டு நன்கு உலரவிடவும். வெயிலில் காயவைக்க வேண்டாம். ஈரப்பதம் போனதும் எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் போட்டு பொரித்தெடுக்கவும். அதே எண்ணெயில் நசுக்கிய பூண்டு பற்களையும், கறிவேப்பிலையையும் பொரித்து தனியாக வைக்கவும். இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த கடலைப்பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள், உப்பு, பொரித்த பூண்டு, கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். நெய் கடலை தயார். இதனை காற்று போகாத டப்பாவில் போட்டு வைக்கவும். கரகர மொறு மொறு ஸ்னாக்ஸ் ரெடி.
தேங்காய்ப்பால் குணுக்கு:
தேங்காய் ஒன்று
உளுத்தம் பருப்பு 1/2 கப்
அரிசி 2 ஸ்பூன்
உப்பு 2 சிமிட்டு (இனிப்பு சுவையை கூட்டிக் காட்ட)
ஏலக்காய் 4
வெல்லம் 1 கப்
எண்ணெய் பொரிக்க
முதலில் தேங்காயைத்துருவி வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கரைக்கவும்.
உளுத்தம் பருப்பு, அரிசி இரண்டையும் அரைமணி நேரம் ஊறவிட்டு 2 சிமிட்டு உப்பு போட்டு அதிகம் நீர் சேர்க்காமல் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பந்து போல் அரைத்தெடுக்கவும்.
இப்பொழுது வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடானதும் உளுத்தம் மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக எண்ணெயில் கிள்ளிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும். இதனைத் தயாராக வைத்திருக்கும் தேங்காய்ப் பாலில் சேர்த்து சிறிது நேரம் கழித்து பரிமாற மிகவும் ருசியான, சத்தான தேங்காய்ப்பால் குணுக்கு தயார்.