
மழை குளிருக்கு ஏற்ற, ஜீரண சக்தியை தரக்கூடிய இஞ்சி சொரசம் மற்றும் இஞ்சி துவையல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இஞ்சி சொரசம் நெடுங்காலமாகவே நம் பழக்கத்தில் உள்ளது. எங்க பாட்டி காலத்துல இருந்தே ஒரு ஏழு எட்டு வயசு ஆனாலே போதும் ஜீரணத்துக்காக மாதத்துக்கு ஒரு தடவை கொடுக்கிற பழக்கம் உண்டு. பெரியவர்களுக்கு கொஞ்சம் காரசாரமா கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு எல்லாம் கொஞ்சம் தண்ணிவிட்டு dilute பண்ணி கொடுக்கிறது வழக்கம். இது பித்தம், ஜீரண கோளாறு, தலைசுற்றல் எல்லாத்துக்கும் நல்லா கேட்கும். வாரத்துக்கு ஒரு தடவை இதை குடிச்சா டாக்டர்கிட்ட போகவேண்டிய அவசியமே இருக்காது.
இஞ்சி சொரசம்:
தனியா 4 ஸ்பூன்
இஞ்சி 50 கிராம்
சீரகம் 1 ஸ்பூன்
எலுமிச்சம் பழம் 1 மூடி
நாட்டு சக்கரை (அ)
வெல்லம் - தேவையானது
தேன் ஒரு ஸ்பூன்
இந்த இஞ்சி சொரசம் செய்வதற்கு அடுப்பு தேவையில்லைை. வயிற்றுப் பிரச்னைகளை எளிதில் சரி செய்யும். அஜீரணக்கோளாறை தீர்க்கக் கூடியது. பித்தம் சம்பந்தப்பட்ட தலை சுற்று, வாந்தி ஆகியவற்றை சரி செய்யக்கூடியது.
ரெண்டு கப் தண்ணீரில் தோல் நீக்கி சுத்தம் செய்த இஞ்சி துண்டுகளையும், தனியா, சீரகத்தையும் 15 நிமிடங்கள் ஊறவிடவும். ஊறிய பொருட்களை மிக்ஸியில் சிறிது நீர் விட்டு விழுதாக அரைக்கவும். அரைத்ததை ஊறவைத்து இரண்டு கப் தண்ணீருடன் கலந்து ஒரு மூடி எலுமிச்சம்பழச்சாறு பிழிந்து நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து கடைசியாக ஒரு ஸ்பூன் தேன் கலந்து அரை கப் அளவில் பருக தொண்டைக்கும் வயிற்றுக்கும் இதம் தரும் இஞ்சி சொரசம் தயார்.
இஞ்சி துவையல்:
இஞ்சி 50 கிராம்
உளுத்தம் பருப்பு 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 6
உப்பு தேவையானது
புளி சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
தாளிக்க:
கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாய் இரண்டையும் சிவக்க வறுத்தெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
மிக்ஸியில் வறுத்த உளுத்தம் பருப்பு, மிளகாய், தேவையான உப்பு, புளி, தேங்காய் துருவல் சேர்த்து கரகரப்பாக பொடித்துக்கொண்டு அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலையை சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்தெடுக்கவும். மிகவும் ருசியான இஞ்சி துவையல் தயார். இதனை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, தயிர் சாதம் என தொட்டுக்கொள்ளலாம்.