

கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது கண்ணனுக்கு நைவேத்தியம் செய்ய (கோகுலாஷ்டமி பலகாரங்கள்) சீடை, தட்டை, இனிப்பு அவல் தேன் குழல் போன்ற பட்சணங்களை செய்வோம் அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
உப்புச் சீடை
தேவையானவை:
பச்சரிசி- 200 கிராம்
உளுத்தம் பருப்பு -5 டீஸ்பூன்
மிளகு -கால் டீஸ்பூன்
சீரகம்- கால் ஸ்பூன்
தேங்காய் -சிறிய அரை மூடி
பெருங்காயம் பொடி -ஒரு டீஸ்பூன்
உப்பு -சிறிதளவு
பொரிகடலை- 3 டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை : அரிசியையும் உளுத்தம் பருப்பையும் தனித்தனியாக வெறும் வாணலியில் அடுப்பில் வைத்து வறுத்துக்கொள்ள வேண்டும் அதை மிக்ஸியில் அல்லது மிஷினில் நைசாக மாவாக்கிக்கொள்ள வேண்டும். அதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய் துருவல் நீரில் கரைத்த உப்பு தண்ணீர் சீரகம் மிளகு கொஞ்சம் தட்டி போட்டு பெருங்காய பொடி பொரிகடலையை போட்டு நன்றாக கலந்து தண்ணீர் விட்டு பிசைந்து ஒரு வெள்ளை துணியை தரையில் விரித்து அதன் மேல் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகளில் ஓரிரு துளைகள் போட்டு ஈரம் போக காயவைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஓரளவு ஈரம் காய்ந்த சீடை உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.
பச்சரிசி தட்டை
தேவையானவை:
பச்சரிசி -200 கிராம்
உளுத்தம் பருப்பு -50 கிராம்
புழுங்கல் அரிசி -50 கிராம்
பச்சை மிளகாய் -ஆறு
கடலைப் பருப்பு -ஐந்து டீஸ்பூன்
உப்பு எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு தண்ணீரை வடித்து கிரைண்டரில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும் உளுத்தம் பருப்பையும் புழுங்கல் அரிசியையும் தனித்தனியாக சிவப்பாக வறுத்துக் கொண்டு மாவாக்கிக் கொள்ள வேண்டும் பச்சை மிளகாயையும் உப்பையும் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.
கடலைப் பருப்பை தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைத்து அதையும் எல்லா மாவுகளையும் அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் போட்டு அரைத்துள்ள பச்சை மிளகாய் உப்பு விழுதுகளையும் போட்டு நன்றாக பிசைந்து இலையில் எண்ணெய் தடவிக்கொண்டு சிறு உருண்டைகளாக மாவை எடுத்துக்கொண்டு தட்டி ஒரு துணியில் போட்டு குச்சியால் ஓரிரு துளைகள் போட்டு சிறிது நேரம் காயவைக்க வேண்டும் .
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் தட்டி வைத்துள்ள தட்டைகளை போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்து விடவேண்டும்.
ஜவ்வரிசி தேன்குழல்
தேவையானவை:
பச்சரிசி -300 கிராம்
ஜவ்வரிசி -100 கிராம்
சீரகம் -ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் -ஒரு தேக்கரண்டி
எண்ணெய் உப்பு- தேவையானது
செய்முறை:
பச்சரிசியையும் ஜவ்வரிசியையும் ஒன்றாக சேர்த்து மாவாக திரித்துக் கொள்ள வேண்டும். திரித்த மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு உப்பு சீரகம், வெண்ணெய் போட்டு தேவையான தண்ணீர் விட்டு மாவை நன்றாக பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து பிசைந்த மாவை சிறு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி தேன்குழல் அச்சுக்குள் எண்ணெய் தடவி மாவை போட்டு காய்ந்த எண்ணெயில் தேன்குழலாக வட்டமாக பிழிந்து இருபுறம் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்து எடுக்க வேண்டும்.
இனிப்பு அவல்
தேவையானவை:
அவல் -200 கிராம்
சர்க்கரை- நூறு கிராம்
தேங்காய் துருவல்- ஒரு கரண்டி
ஏலக்காய் பொடி -ஒரு டீஸ்பூன்
செய்முறை:
அவலை தேவையான கொதித்து ஆறிய தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு தண்ணீரை வடித்து விட வேண்டும் .
வாணலியை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் விட்டு சர்க்கரையை போட்டு கம்பி பாகு ஆகும் போது தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து ஊறிய அவலையும் போட்டு நன்றாக கிளறி கீழே இறக்க வேண்டும். தேவையானால் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு நெய்யில் வறுத்து சேர்க்க சுவையாக இருக்கும்.
இந்த எளிய செய்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், சீடை வெடிக்கும் என்ற பயமில்லாமல் மிகக் குறைந்த நேரத்தில் கடைகளில் வாங்குவது போன்ற மொறுமொறுப்பான, சுவையான பாரம்பரிய கிருஷ்ண ஜெயந்தி நைவேத்தியங்களை உங்கள் கையாலேயே எளிதாகச் செய்து இறைவனுக்குப் படைக்க முடியும்.