

வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த தட்டை ரெசிபி, ஊறவைத்த கடலைப்பருப்பு, பச்சரிசி மாவு, உளுந்தம் பருப்பு மாவு, கடலை மாவு, சீரகம், பெருங்காயம், வத்தல் பொடி, மஞ்சள், சில்லி ஃப்ளேக்ஸ், பட்டர் சேர்த்து சப்பாத்தி பிசைவு போல பிசைந்து தட்டையாக தட்டி மிதமான சூட்டில் பொரித்து தயாரிக்கப்படுகிறது. புரதச்சத்து, ஆற்றல், செரிமான நன்மைகள் கொண்ட இந்த ஸ்நாக்ஸ் நீண்டநாள் ஸ்டோர் செய்யலாம்.
தட்டை என்பது ஒரு பாரம்பரியமான நொறுக்கு தீனி வகையாகும். விசேஷ காலங்களில் செய்யப்படும் முறுக்கு, அதிரசம் போல இதையும் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். மொறுமொறுப்பான காரசாரமான தட்டை தேனீர் மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு உகந்த உணவு பொருளாகும். இதில் பச்சரிசி மாவு மற்றும் கடலை பருப்பு சேர்ப்பதால் உடலுக்கு உடனடியான ஆற்றலை தரக்கூடியது.
மேலும் இதில் சேர்க்கப்படும் சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் செரிமானத்தை மேம்படுத்தி வயிறு உப்பசத்தைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள உளுந்தம் பருப்பு மாவு குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்தைத் தருகிறது. மேலும் உளுந்தம் பருப்பில் இருக்கும் சத்துக்கள் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
ஸ்நாக்ஸ் ஐட்டம் என்றாலே வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடைகளில்தான் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளோம். இன்று அதற்கு மாற்றாக வீட்டிலேயே தட்டை செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். இது ஒரு புதுவிதமான சுவையில் கிரிஸ்பியாக நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - தேவையான அளவு
பச்சரிசி மாவு - 500 கிராம்
உளுந்தம் பருப்பு மாவு - 100 கிராம்
கடலை மாவு - 30 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
சீரகம் - 5 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - தேவையான அளவு
வத்தல் பொடி - தேவையான அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
சில்லி ஃப்ளேக்ஸ் - தேவையான அளவு
பட்டர் - தேவையான அளவு
நீர் - தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை நன்கு கழுவி ஒரு மணிநேரம் ஊறவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, கடலை மாவு, உளுந்தம் பருப்பு மாவு, சீரகம் ஊறவைத்திருந்த கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் வத்தல் பொடி, மஞ்சள் தூள், சில்லி பிளக்ஸ், உப்பு சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.
இதனுடன் பட்டர் சேர்த்து வெதுவெதுப்பான நீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி பக்குவத்தில் பிசைந்துகொள்ளவும். இதனை பத்து நிமிடங்கள் தனியாக அப்படியே விடவும். பத்து நிமிடங்கள் கழித்து இதனை சிறு உருண்டைகளாக பிடித்து தட்டையாக தட்டிக்கொள்ளவும். தடிமனாகவும் இருக்கக்கூடாது மெல்லியதாகவும் இருக்கக் கூடாது குறிப்பிட்ட பக்குவத்தில் இருக்கவேண்டும்.
வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் கொதித்தபின் நாம் தட்டி வைத்திருந்த தட்டையை எண்ணெய்யில் சேர்த்து இரண்டு புறமும் நன்கு சிவந்து வரும்படி பொறுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் மீடியமான வெப்பத்தில் இருக்கவேண்டும் தட்டை கருகாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மொறுமொறு தட்டை ரெசிபி தயார். கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும் நாம் வீட்டிலேயே செய்வது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மிகுந்த ஆரோக்கியம் உடையதாக இருக்கும். இந்த தட்டை ரெசிபியை இறுக்கமான கண்ணாடி பாட்டில் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் போட்டு ஸ்டோர் செய்தும் சாப்பிடலாம்.
பெருங்காயம் மற்றும் சீரகத்தின் சரியான அளவோடு இந்த செய்முறையைப் பின்பற்றுவதன் மூலம், செரிமானப் பிரச்சனைகள் ஏதுமின்றி நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் மொறுமொறுப்பாக இருக்கும் தட்டையை நீங்கள் எப்போதும் வீட்டில் சேமித்து வைக்க முடியும்.