
நெல்லிக்காய் துவையல்
தேவை:
பெரிய நெல்லிக்காய் – 6, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
வற மிளகாய் – 4,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், வற மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும். சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றது இந்தத் துவையல்.
நெல்லிக்காய் போளி
தேவை:
பெரிய நெல்லிக்காய் - 10, மைதா மாவு - 100 கிராம், நெய் - 100 மில்லி, கடலைப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 200 கிராம் (பொடித்துக்கொள்ளவும்), தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
மைதா மாவுடன் நல்லெண்ணெய், கேசரி பவுடர் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசைந்து மூடி வைக்கவும். நெல்லிக்காயை வேகவைத்து உதிர்த்து கொட்டை எடுக்கவும். கடலைப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து தண்ணீர் வடிக்கவும்.
வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். வேக வைத்த கடலைப்பருப்பு, நெல்லிக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் சிறிதளவு வெல்லத் தண்ணீரை விட்டு கெட்டியாக அரைக்கவும். வாணலியில் மீதம் உள்ள வெல்லத் தண்ணீர், அரைத்த விழுது சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஆறிய உடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
ஒரு வாழையிலையில் சிறிதளவு நெய் தடவி, மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து லேசாக குழவியால் உருட்டி பூரணத்தை உள்ளே வைத்து மூடி கைகளால் போளி வடிவில் தட்டவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் தீயைக் குறைத்து, தட்டிவைத்து இருக்கும் போளியை ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் நெய் தடவி வாட்டி எடுக்கவும். சுவையான நெல்லிக்காய் போளி தயார்.
தேன் நெல்லிக்காய்
தேவை:
நெல்லிக்காய் - 1 கிலோ
பால் - இரண்டு கரண்டி
கருப்பட்டி - அரை கிலோ
செய்முறை:
நெல்லிக்காயை சுத்தமாகக் கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதில் பரப்பி வையுங்கள். வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் கலந்த தண்ணீர் சூடானதும், நெல்லிக்காய் பரப்பிய இட்லி தட்டுகளை வைத்து, இட்லி பானையை மூடி அவித்து எடுக்கவும்.
கருப்பட்டியை தூளாக்கி தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்குபோக வடிகட்டி அடுப்பில் வைத்து பாகு காய்ச்சுங்கள். பிசுபிசுப்பு தன்மை வந்தவுடன் இறக்கி விடவும். இதில் வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். ஊற ஊற, தினமும் ஒன்றாக எடுத்து சாப்பிட. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
நெல்லிக்காய் தொக்கு
தேவை:
நெல்லிக்காய் - கால் கிலோ
நல்லெண்ணெய் - 100 மி.லி
கடுகு - 1 ஸ்பூன்
புளி - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கடுகு தூள் - சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி, அதில் நெல்லிக்காயைப் போட்டு குக்கரில் வைத்து வெய்ட் போடாமல் அடுப்பில் 15 நிமிடம் வைக்க வேண்டும்.
பிறகு எடுத்து ஆறவைத்து, கொட்டைகளை நீக்கிய புளி சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், அரைத்த விழுது, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவேண்டும்.
கடைசியாக கடுகு பொடியை சேர்த்துக்கிளறி இறக்க வேண்டும். சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார். இது மூன்று மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.