

“பாட்டி... நான் கனடா போயிட்டா, நீங்க சமைக்கிற அந்த ரசத்தை எப்படிப் பாட்டி சாப்பிடுவேன்?”
சமையலறையில் மிளகையும் சீரகத்தையும் வறுத்துக்கொண்டிருந்த பாட்டியின் அருகில் வந்து நின்றாள் பேத்தி காவியா.
“அதுக்காகத்தானே உன்னை அழைத்திருக்கிறேன். நாளைக்கு விமானத்தில் ஏறப்போகிறவள், இன்னிக்குத்தான் ரசத்தைப் பற்றி கவலைப்படுகிறாயா?” என்று சிரித்தாள் பாட்டி.
“உங்க ரசத்துக்கு ஈடு இணையே இல்லை பாட்டி! அம்மா எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், உங்க ரசத்தில் வருகிற அந்த மணமும் சுவையும் வரவே மாட்டேங்குது. அங்கே போய் நான் என்ன செய்வது?”
பேத்தியின் ஏக்கத்தைப் பார்த்த பாட்டி, அவளை அருகில் அழைத்தாள்.
“கவலைப்படாதே. உனக்காக ரசப்பொடி அரைத்துத் தருகிறேன். நீயும் அங்கே என் ரசத்தைப் போல செய்து சாப்பிடலாம்!”
“அப்படியா பாட்டி? அப்போ செய்முறையையும் சொல்லித் தரணும்!”
“சொல்லித் தருவதோடு மட்டுமல்ல... அளவோடு எழுதிக் கொடுக்கிறேன். நீயே செய்து பழகிக்கொள்ள வேண்டும்!”
“இதோ, முதலில் பொருட்களை எடுத்து வை!” என்றாள் பாட்டி.
பாட்டியின் கைமணமிக்க ரசப்பொடி
தேவையான பொருட்கள்:
தனியா – 1 கப்
காய்ந்த மிளகாய் – 15 முதல் 18
துவரம்பருப்பு – 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
வெந்தயம் – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
பெருங்காயத்தூள் – ½ ஸ்பூன்
“பாட்டி, இவ்வளவு பொருட்களா?” ஆமாம் காவியா.
“ரசத்துக்கு நல்ல மணமும் சுவையும் வர வேண்டுமென்றால் ஒவ்வொன்றுக்கும் ஒரு வேலை இருக்கிறது கண்ணு!”
வறுப்பதில்தான் சூட்சுமம்!
முதலில் வாணலியைச் சூடாக்கி, எண்ணெய் இல்லாமல் தனியாவை லேசாக வறுக்க வேண்டும். அதன் பிறகு காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுக்க வேண்டும்.
“வெந்தயத்தை மட்டும் அதிகமாக வறுக்காதே. கசப்பு வந்துவிடும்!” என்று பாட்டி எச்சரித்தாள்.
இறுதியாக பெருங்காயத்தைச் சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
வறுத்த பொருட்களை ஒரு தட்டில் கொட்டி முழுமையாக ஆறவிட வேண்டும்.
தனித்தனியாக வறுப்பது நல்லது.
தனியா லேசாக மணம் வரும் வரை வறுக்கலாம். மிளகாயை கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பருப்பு வகைகள் பொன்னிறமாகும் வரை வறுத்தால் போதும்.
வறுப்பதன் நோக்கம் கருகச் செய்வது அல்ல; ஈரப்பதத்தை நீக்கி மணத்தை வெளிக்கொணர்வதே!
அரைக்கும் முறை
பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு, மிகவும் நைசாக இல்லாமல் சற்றே பொடியாக அரைத்துக்கொள்ளலாம்.
அரைத்த ரசப்பொடியை உடனே டப்பாவில் போடாமல், மீண்டும் ஒரு தட்டில் பரப்பி சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
“சூடாக இருக்கும்போதே அரைக்கக் கூடாதா பாட்டி?”
“கூடாது. அதுதான் முக்கியம். சூடு இருக்கும் போது அரைத்தால் ஈரப்பதம் உருவாகி, பொடியின் மணமும் ஆயுளும் பாதிக்கலாம்.”
மூன்று மாதம் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
“இப்போ முக்கியமான விஷயம்...” என்று பாட்டி தொடர்ந்தாள்.
ரசப்பொடியைச் சேமிக்கும் டப்பா முழுமையாக சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருக்க வேண்டும். காற்றுப் புகாத கண்ணாடி அல்லது ஏர் டைட் கண்டெயினரில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
ரசப்பொடியை எடுக்கும்போதெல்லாம் உலர்ந்த கரண்டியையே பயன்படுத்த வேண்டும்.
பெரிய டப்பாவை தினமும் திறப்பதைத் தவிர்த்து, ஒரு சிறிய டப்பாவில் ஒரு வாரத்திற்குத் தேவையான அளவை மட்டும் எடுத்து வைத்துக்கொள்வது மிகச் சிறந்த பாதுகாப்பு முறையாகும். இன்னும் சிறந்ததும் கூட.
சரியான முறையில் தயாரித்து, ஈரப்பதம் புகாமல் சேமித்தால் ரசப்பொடி மூன்று முதல் சில மாதங்கள் வரை நன்றாக இருக்கும். ஆனால் அதை சேமித்து வைப்பதிலும் தயாரிப்பிலும் தான் அதன் ஆயுள் ரகசியம் உள்ளது. அதனால் அதில் மிக கவனம் செலுத்த வேண்டும்.
“இனி கனடாவிலும் பாட்டி ரசம்!”
“எல்லாம் எழுதிக்கிட்டேன் பாட்டி. இனிமேல் கனடாவிலும் உன் ரசம் மணக்கும்!” என்றாள் காவியா.
“ரசம் மட்டும் மணக்காது... என் நினைவும் மணக்கும்!” என்று புன்னகைத்தாள் பாட்டி.
பேத்தி பாட்டியை அணைத்துக்கொண்டாள்.
தொலைவு எவ்வளவு அதிகமானாலும், வீட்டுச் சுவையைச் சுமந்து செல்லும் ஒரு சிறிய ரசப்பொடி டப்பாவுக்குள் பாசமும் பாரம்பரியமும் பயணம் செய்யாதா?
இந்த எளிய ரசப்பொடி செய்முறை வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வெளிநாட்டிலும் உங்கள் வீட்டின் பாரம்பரிய சுவை மாறாமல் மணமணக்கும் ரசத்தை நிமிடங்களில் தயாரித்து மகிழலாம்.