

கிராமத்து மாலை நேர சிற்றுண்டியாக பிரபலமான தட்டைப் பயறு வடை, இன்று ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய ரெசிபியாக மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. புரதம், நார்ச்சத்து, இரும்பு, வைட்டமின்கள் நிறைந்த இந்த பருப்பு, இரத்தச் சர்க்கரை, அழுத்தம், இதய நலனை மேம்படுத்த உதவுகிறது. ஊறவைத்து உலர்த்தி அரைக்கல்லில் உடைக்கும் பழமையான முறையுடன், கிராமத்து வடை மற்றும் தயிர் வடை என இரண்டு சுவைமிகு வகைகள் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றன.
இப்பொழுதும் கிராமப்புறங்களுக்குச் சென்றால், அங்கே இந்தத் தட்டைப்பயறு வடை கிடைக்கும். அது அவர்களின் மாலை நேரச் சிற்றுண்டி.
இப்போது நமக்கு "ஸ்விக்கி (Swiggy)” “செப்டோ (Zepto)” போன்ற சேவைகள் இருப்பதால், நாம் வெளியே தேவையான பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டு நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.
முன்பு பெரும்பாலும் நம் பாட்டி வீடுகளில் யாராவது உறவினர் வந்துவிட்டால் போதும், அவர்களுடன் பேசிக்கொண்டே இந்த இன்ஸ்டன்ட் வடையைச் செய்து விடுவார்கள்.
உளுந்து வடை மாவைப்போல, இதற்கும் குறைவான தண்ணீர் தெளித்து அரைத்து வடை செய்தால் போதும். எளிதாகச் செய்யலாம்.
தட்டைப் பயறு ஒரு சத்தான மற்றும் ஆரோக்கியமான பருப்பு வகையாகும். இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால் உடல் வளர்ச்சி, செரிமானம் மற்றும் இரத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், இரத்தச் சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்தவும், இதய நலனைப் பாதுகாக்கவும் பயனளிக்கிறது.
அதனால்தான் இந்தத் தட்டைப் பயறு வாங்கியவுடன், அதனை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் நன்றாக வெயிலில் உலர்த்தி, அரைக்கல்லில் போட்டு இரண்டாக உடைத்து வைத்துக் கொள்வார்கள்.
தட்டைப் பயறு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
கிராமத்து தட்டைப் பயறு வடை
தேவையான பொருட்கள்:
தட்டைப் பயறு – 2 கப்
துவரம் பருப்பு – ½ கப்
உளுத்தம் பருப்பு – ½ கப்
பச்சை மிளகாய் – 3
வர மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
தேவையான அளவு உப்பு
பெரிய வெங்காயம் – 2
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – 1 டீஸ்பூன்
தேவையான அளவு எண்ணெய்
இஞ்சி – ஒரு துண்டு
செய்முறை:
பருப்பு வகைகளை நன்றாகக் கழுவி, ஒரு மணி நேரம் வரை ஒன்றாக ஊறவைக்கவும். பருப்பு ஊறிய பிறகு, அதிலுள்ள தண்ணீரை வடித்து வைக்கவும்.
தண்ணீர் வடித்த பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் பச்சை மிளகாய், வர மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
பருப்பை மிகவும் நைசாக அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், சீரகம், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து உருண்டையாக அல்லாமல், சற்று தட்டையாகத் தட்டிக்கொள்ளவும். பின்னர் இதேபோல் மீதமுள்ள மாவையும் தட்டி, எண்ணெயில் போட்டு இருபுறமும் நன்கு சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
சூடான வடைகளை தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் பரிமாறவும்.
தயிர் வடை
தேவையான பொருட்கள்:
தட்டைப் பயறு வடைகள் – 10 முதல் 15
புளிக்காத கெட்டித்தயிர் – 2 கப்
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா 1 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிது
முந்திரிப்பருப்பு – 10
காராபூந்தி – 1 கப்
செய்முறை:
தட்டைப் பயறு வடைகளை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, அதன் மீது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்த புளிக்காத கெட்டித்தயிரை ஊற்றி மூடி வைக்கவும்.
அரை மணி நேரத்திற்குப் பிறகு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் உடைத்த முந்திரிப்பருப்பைத் தாளித்து, அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து வடைகளின் மேல் கொட்டவும்.
இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து, வடைகள் உடைந்து விடாமல் மெதுவாகக் கலக்கவும். ஒரு தட்டில் இந்தத் தயிர் வடைகளை வைத்து, அதன்மேல் காராபூந்தி தூவி பரிமாறவும்.
ஒரு தட்டில் இந்தத் தயிர் வடைகளை வைத்து, அதன்மேல் காராபூந்தி தூவி பரிமாறவும். பாரம்பரியமான இந்தத் தட்டைப்பயறு வடை மற்றும் தயிர் வடை செய்முறையைக் கற்றுக்கொள்வதன் மூலம், எந்தவொரு விசேஷ நிகழ்வுகளிலும் அல்லது மாலை நேரங்களிலும் பாரம்பரிய சுவைமிக்க உணவை வழங்கி அனைவரின் பாராட்டுக்களையும் பெறலாம்.