

முளைகட்டிய பச்சைப் பயறு கொழுக்கட்டை
தேவை:
கொழுக்கட்டை மாவு - 200 கிராம்
முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்
பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் - தலா 2 (பொடியாக நறுக்கவும்)
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன் கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் முளைகட்டிய பயறு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கொழுக்கட்டை மாவுடன் வதக்கிய பயறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசையவும். பிறகு மாவைக் கொழுக்கட்டை களாகப் பிடித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சத்தான பச்சைப் பயறு கொழுக்கட்டை ரெடி.
பச்சைப் பயறு கட்லட்
தேவை:
பச்சைப் பயறு – 1/4 கிலோ,
கேரட், பீன்ஸ் – தலா 50 கிராம்,
மஞ்சள் தூள் – சிறிதளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப்பொடி (கரம் மசாலா) – சிறிதளவு,
பெரிய வெங்காயம் – 2,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு,
காய்ந்த பிரெட் தூள் – சிறிதளவு.
செய்முறை:
பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுத்தால், சுவையான பச்சைப் பயறு கட்லெட் ரெடி.
பச்சைப் பயறு குருமா
தேவை:
பச்சைப் பயறு – ஒரு கப்,
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4, பெருங்காயத்தூள், கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயறை முதல் நாளே ஊறவைத்து, மறு நாள் மெல்லிய துணியில் முளை கட்டவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். முளை கட்டிய பச்சைப் பயறை வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து… பச்சை மிளகாய், இஞ்சி–பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, உப்பு சேர்க்கவும். அதனுடன் வேகவைத்த பயறை சேர்த்துக்கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, குருமா பதத்தில் இறக்கவும். சூப்பர் சுவையில் பச்சைப் பயறு குருமா ரெடி.
பச்சைப் பயறு துவையல்
தேவை:
பச்சைப்பயறு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 5, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயறை ஊறவைத்து வேகவிடவும். இதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்து இதனுடன் சேர்த்தால் ஆரோக்கியமான பச்சைப்பயறு துவையல் தயார்.