

வாழைப்பூ மடல் கூட்டு
தேவை:
வாழை மடல் துண்டுகள் (வாழைப்பூவின் உள்ளே வெள்ளையாக உள்ள மடலை நறுக்கிய துண்டுகள்) – ஒரு கப்,
நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, குட்டி மாங்காய் துண்டுகள் தலா – அரை கப்,
சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன்,
வேக வைத்த துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – தலா கால் கப்,
ஆம்சூர் பொடி, வெல்லத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, நீர் மோர் – சிறிதளவு,
வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாழைப்பூ மடலை நறுக்கியவுடன் நீர்மோரில் போடவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய வாழைப்பூ மடலை பிழிந்து போட்டு, உப்பு, சாம்பார் பொடி, வெங்காயம், தக்காளி, மாங்காய் சேர்த்துக் கலந்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும், தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி… ஆம்சூர் பொடி, வெல்லத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும். சூப்பர் சுவையில் வாழைப் பூ மடல் கூட்டு தயார். உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த கூட்டு இது.
பப்பாளிக்காய் கூட்டு
தேவை:
பப்பாளிக்காய் - 2 கப்
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
சிறு பருப்பு - 1/3 கப்
மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க:
தேங்காய்த் துருவல்- 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 1
கறிவேப்பிலை/ கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.
குக்கரில் பப்பாளிக்காயின் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள். அதோடு சிறு பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய்,மஞ்சள், உப்பு சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
2-3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விசில் போனதும் திறங்கள். பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதை அப்படியே அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
அதேசமயம் மற்றொரு கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப் பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்த்துக் கிளறுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான பப்பாளிக்காய் கூட்டு தயார்.
பசலைக் கீரை கூட்டு
தேவை:
பசலைக் கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு - 200 கிராம்
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு பல் - 3
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
குக்கரில் துவரம்பருப்பை இட்டு, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம் நறுக்கி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர், தக்காளி சேர்த்து வதங்கியதும், பசலைக்கீரை சேர்த்து வதக்கவும். கீரை பாதி வெந்து சுருங்கியதும், சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். பச்சை வாசனை போனதும் வேகவைத்த கீரை, உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவிடவும். இறுதியாக. மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொரித்து கீரையில் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பசலைக்கீரை கூட்டு தயார்.
வெள்ளரிக்காய் கூட்டு
தேவை:
வெள்ளரிக்காய் -200 கிராம்
பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பு வேகவைத்தது -1/2 கப்
உப்பு -1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
பால்-1/4 கப்
அரைக்கத்தேவையான பொருட்கள்:
தேங்காய் -1 டீஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-3
சின்ன வெங்காயம் -4
தாளிக்க:
எண்ணெய் -2 ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வெள்ளரிக்காயை சிறியதாக நறுக்கி 1/4 கோப்பை பால் விட்டு வேகவைக்கவும். மேற்கூறிய அரைக்க வேண்டிய பொருட்களை, நல்ல விழுதாக அரைத்துக்கொள்ளவும். பருப்பு, வெள்ளரிக்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும், நன்கு கொதித்து வரும்போது அரைத்த விழுதை சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவைக்கவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யவும். வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.