

குஜராத்தி சம்மர் ஸ்பெஷல் ஆம் ரஸ் (Aam Ras) ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.நன்கு பழுத்த பெரிய மாம்பழங்கள் 3
2.குளிரூட்டப்பட்ட (Chilled) பால் ¼ கப்
3.ஏலக்காய் பவுடர் ¼ டீஸ்பூன்
4.பவுடராக்கிய சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன்
5.குங்குமப் பூ இழைகள் 7
6.உடைத்த கொட்டைகளின் (Nuts) கலவை 1 டேபிள் ஸ்பூன்
7.ஐஸ் க்யூப்ஸ் தேவையான அளவு
செய்முறை:
பழுத்த, நாரில்லாத மாம்பழங்களை தோல் சீவி, சதைப்பகுதியை நறுக்கி எடுத்துக்கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் போட்டு குளிர்ந்த பாலையும் அதனுடன் சேர்த்து நன்கு கூழாகும் வரை அடித்துக்கொள்ளவும்.
பிறகு அதை ஒரு பௌலில் கொட்டி ஏலக்காய் பவுடர், சர்க்கரை மற்றும் குங்குமப் பூ சேர்த்துக் கலந்து அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து குளிரச் செய்து எடுக்கவும். ஆம் ரஸ்ஸின் மேற் பரப்பில் நட்ஸ் கலவையை தூவி அப்படியே சாப்பிடலாம் அல்லது சூடான பூரிக்கு சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொண்டும் உண்ணலாம்.
சர்க்கரை, குங்குமப் பூ, ஐஸ் க்யூப்ஸ் மற்றும் உடைத்த நட்ஸ் வகைகளை விருப்பப் பட்டால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். வேண்டாம் என்றால் தவிர்த்துவிடலாம்.
ஹோட்டல் ஸ்டைல் கொள்ளு தோசை ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.இட்லி அரிசி 1 கப்
2.பச்சரிசி 1 கப்
3.கொள்ளு 1½ கப்
4.உளுத்தம் பருப்பு ¾ கப்
5.வெந்தயம் 1½ டீஸ்பூன்
6.எண்ணெய் 50 கிராம்
7.நெய் 50 கிராம்
8.உப்பு தேவையான அளவு
செய்முறை:
இட்லி அரிசி, பச்சரிசி, கொள்ளு, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு முழுகும் வரை தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ஐந்து மணி நேரம் கழித்து ஊறவைத்த பொருட்களை கழுவி நீரை வடித்தெடுக்கவும். பின் அந்த கலவையை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
பின் அந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும். நெய்யை சூடாக்கி உருக்கி எண்ணெய்யுடன் கலந்துகொள்ளவும். 6-7 மணி நேரம் கழித்து தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல்லில் சிறிது நீர் தெளித்து, சுத்தமான காட்டன் துணியால் துடைத்துவிடவும். பின் கரண்டியில் மாவை எடுத்து தோசை கல்லில் மெல்லிய தோசையாக வார்க்கவும். எண்ணெய்+நெய் கலவையை ஸ்பூனில் எடுத்து தோசை மீதும் தோசையை சுற்றிலும் பரவலாக ஊற்றி தோசையை வேகவிடவும்.
மொறு மொறுவென்று வெந்த தோசையை கரண்டியால் மடித்து எடுத்து சூடாகப் பரிமாறவும். தொட்டுக்கொள்ள சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.