
குஜராத்தி தால் (Dhal) டோக்ளி ரெசிபி
பருப்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
1.துவரம் பருப்பு 2 கப்
2.தண்ணீர் தேவையான அளவு
3.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
4.சிவப்பு மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
5.தனியா(Coriander)பவுடர் 1 டீஸ்பூன்
6.சீரகத் தூள் ½ டீஸ்பூன்
7.கரம் மசாலா தூள் ¼ டீஸ்பூன்
8.உப்பு தேவையான அளவு
9.கொத்தமல்லி இலைகள் ஒரு கைப்பிடி அளவு.
10.தக்காளி 2
11.பெருங்காயத் தூள் ¼ டீஸ்பூன்
டோக்ளி செய்வதற்கு தேவையான பொருட்கள்:
1.கடலை மாவு 1 கப்
2.உப்பு மற்றும் தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவி, தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைக்கவும். ஊறவைத்த பருப்பை குக்கரில் போடவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். பிறகு அடுப்பில் வைத்து பருப்பை வேகவைத்து இறக்கவும்.
கடலை மாவில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஒரு நீளமான கயிறுபோல் உருட்டி, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளிகளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெட்டிய டோக்ளி மற்றும் தக்காளித் துண்டுகளை வேக வைத்துள்ள பருப்புடன் சேர்த்து, குக்கரை மீண்டும் அடுப்பில் ஏற்றி சிறு தீயில் பருப்பை கொதிக்கவிடவும். டோக்ளிகள் நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, மல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும்.
சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து உண்ண சுவையான சைடு டிஷ் தயார். சூடாகப் பரிமாறவும்.
குஜராத்தி கிச்சடி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.பச்சரிசி 1 கப்
2.பாசிப்பருப்பு 1 கப்
3.சீரகம் ½ டீஸ்பூன்
4.கடுகு ½ டீஸ்பூன்
5.பெருங்காயத் தூள் ¼ டீஸ்பூன்
6.இஞ்சி துருவல் 1 டேபிள் ஸ்பூன்
7.உரித்த பூண்டு ½ டேபிள் ஸ்பூன்
8.மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
9.பிளாக் பெப்பர் கார்ன் 1 டீஸ்பூன்
10.தண்ணீர் 2.5 கப்
11.உப்பு தேவையான அளவு
12.கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி அளவு
13.நெய் 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
அரிசி பருப்பு இரண்டையும் கலந்து தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவைக்கவும். ஒரு குக்கரில் நெய்யை ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, பெருங்காயத்தூள், இஞ்சி துருவல், உரித்த பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் பிளாக் பெப்பர் கார்ன் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
பின் அதனுடன், நீரை வடித்துவிட்டு, அரிசி பருப்பு கலவையை சேர்த்து மேலும் கீழுமாக நன்கு கலந்து விடவும். பின் உப்பையும் தண்ணீரையும் சேர்த்து குக்கரை மூடிவிடவும். மிதமான தீயில் வைத்து 4-5 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
7 நிமிடம் கழித்து, மூடியை திறந்து, கொத்தமல்லி இலை தூவி சூடாகப் பரிமாறவும். தயிர் அல்லது சட்னி தொட்டுக்க வைக்கலாம்.