
நம் வீட்டிலேயே சுலபமா எளிய முறையில் செய்யக் கூடியது ஆரோக்கியம் நிறைந்த அல்ஸி லட்டு. என்னென்ன பொருட்கள் கொண்டு இதை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
அல்ஸி லட்டு
தேவையான பொருட்கள்:
1.அல்ஸி (Flax Seeds) 1 கப்
2.முழு கோதுமை மாவு 1 கப்
3. பொடித்த வெல்லம் 1 கப்
4. நெய் ½ கப்
5. உடைத்து நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, வால்நட் கலவை ¼ கப்
6. ஏலக்காய் பவுடர் ½ டீஸ்பூன்
செய்முறை:
அல்ஸி விதைகளை வாணலியில் போட்டு மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்தெடுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு பொடியாகிக் கொள்ளவும். பின் வாணலியில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கோதுமை மாவை போட்டு கோல்டன் கலர் வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும். பிறகு அதோடு அல்ஸி பவுடரை சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கலந்து விடவும். அத்துடன் நட்ஸ் வகைகளை சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றுசேர நன்கு கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். சிறிது ஆறியதும் வெல்லப் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். பாத்திரத்தின் சூட்டிலேயே வெல்லம் உருகி மற்ற பொருட்களுடன் ஒன்றாக கலந்துவிடும். அதன் மீது ஏலப் பொடியை தூவவும். கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு தேவையான சைஸ் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
உருண்டை உதிர்வது போலிருந்தால் கொஞ்சம் நெய்யை உருக்கி மாவுடன் கலந்தால் சுலபமா உருண்டைகளைப் பிடித்து விடலாம். லட்டுகளை நன்கு ஆறவிட்டு காற்றுப் புகாத கண்ணாடி ஜாரில் போட்டு இறுக மூடிவைத்தால் இரண்டு வாரம் வரை கெடாது. அவ்வப்போது ஸ்னாக்ஸ்ஸாகவும் உணவுக்குப் பின் டெசெர்ட்டாகவும் உண்டு மகிழலாம்.
இதிலுள்ள நார்ச்சத்துக்கள் சிறப்பான செரிமானத்துக்கும், குடல் இயக்கங்கள் நல்ல முறையில் நடைபெறவும் உதவும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
நெய் மற்றும் நட்ஸ்கள் உடல் உஷ்ணம் குறையாமல் பாதுகாத்து அல்ஸி லட்டை குளிர்காலத்துக்கு ஏற்ற ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்ஸாக மாற்றும். கோதுமை மாவு மற்றும் வெல்லம் உடலுக்கு தொடர்ந்து சக்தி அளிக்க உதவும். இரும்புச்சத்து போன்ற கனிமச்சத்தும் உடலுக்கு கிடைக்கும்.