இந்த வருடம் பொங்கல் பண்டிகையை ஆரோக்கியமான முறையில் கொண்டாட சத்தான சுவையான 3 பொங்கல் ரெசிபிகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
முந்திரி, திராட்டை - விருப்பத்திற்கேற்ப
நெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும். பாசிப்பருப்பை நன்றாக கழுவிய பின்னர் வேக வைத்து கொள்ளவும். வெல்லத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும். ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்த பின்னர் அதில் ஒன்னேமுக்கால் கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக விட வேண்டும். ஓட்ஸில் தண்ணீர் வற்றி வெந்ததும், அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்ல பாகு, வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும். 5 நிமிடங்கள் வரை கைவிடாமல் கிளற வேண்டும். இல்லையெனில் அடி பிடித்து விடும். அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் அதில் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும். கடைசியாக சிறிது நெய் சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் இனிப்பு பொங்கல் ரெடி.
தேவையான பொருட்கள்:
சிவப்பரிசி - 1 கப்
கருப்பட்டி - 1 1/2 கப்
முந்திரி, திராட்சை - விருப்பத்திற்கேற்ப
சுக்கு தூள் - கால் தேக்கரண்டி
நெய்- 3 தேக்கரண்டி
செய்முறை:
சிவப்பரிசியை நன்றாக கழுவி 8 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். கருப்பட்டியை நன்றாக பொடித்து சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி தனியாக வைத்து கொள்ளவும். கருப்பட்டியில் தூசி இருக்கும் அதனால் கண்டிப்பாக வடிகட்ட வேண்டும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும். நன்றாக ஊறிய சிவப்பரிசியில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிவப்பரிசி நன்றாக குழைய வேக வேண்டும் அப்போது தான் ருசியாக இருக்கும். அரிசி நன்றாக குழைந்ததும், அதில் வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். அரிசியும், கருப்பட்டியும் நன்றாக சேர்ந்து வந்ததும் அதில் வறுத்த முந்திரி, திராட்டை, சுக்கு தூள், மீதமுள்ள நெய் சேர்த்து கலந்து இறக்கவும். இப்போது சூப்பரான சத்தான சிவப்பரிசி பொங்கல் ரெடி.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் - 1/2 கப்
வெல்லம் - 1 கப்
முந்திரி, திராட்சை - விருப்பத்திற்கேற்ப
ஏலக்காய் தூள் - சிறிதளவு
பச்சை கற்பூரம் - அரை பின்ச்
தேங்காய் பால் - 1 1/2 கப்
நெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும். வெல்லத்தை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து பாகு எடுத்து கொள்ளவும். சிவப்பு அவலை நன்றாக கழுவி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி பொடித்த சிவப்பு அவலை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். பால் வற்றி அவல் வெந்ததும் அதில் வெல்லப்பாகு சேர்த்து கிளறவும். வெல்லப்பாகு நன்கு கொதிக்கும் போது ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம், முந்திரி, திராட்டை சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும். அனைத்தும் ஒன்று சேர்த்து சரியான பதம் வந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கலந்து இறக்கவும். சூப்பரான சிவப்பு அவல் தித்திப்பு பொங்கல் ரெடி.