
வெந்தய பணியாரம்
தேவையானவை:
புழுங்கல் அரிசி – 1/4 கிலோ, வெந்தயம் – 50 கிராம், உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன், கேரட் துருவல் – ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, வெந்தயம், உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு மணிநேரம் ஊறவைத்து, நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து இஞ்சி, கேரட், வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக் கல்லில் எண்ணை சிறிது விட்டு, மாவை ஊற்றி, இருபுறமும் ஒரு சிறிய குச்சியில் திருப்பி வேகவிட்டு எடுக்கவும். வெந்தய பணியாரத்துக்கு கொத்தமல்லி சட்னி சிறந்த காம்பினேஷன்.
ஜவ்வரிசி ஊத்தப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி – 4 கப், உளுந்து – ஒரு கப், ஜவ்வரிசி – கால் கிலோ, வெங்காயம் – 2, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து ஊறவைத்து, தோசைக்கு அரைப்பது போல் அரைத்து, புளிக்கவிட்டு உப்பு சேர்க்கவும். மறுநாள் ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து மாவில் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, மாவை கெட்டியாக ஊற்றி, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும். விருப்பப்பட்டால், கேரட் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்
பாசிப்பருப்பு புட்டு
தேவையானவை:
பாசிப்பருப்பு – 2 கப், வெல்லம் – அரை கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள், நெய், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும். வெந்த இட்லிகளை எடுத்து உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். உதிர்த்த மாவில் வெல்லக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதில் நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறினால். சத்தான பாசிப்பருப்பு புட்டு ரெடி.
கல்கண்டு வடை
தேவையானவை:
உளுந்து – ஒன்றரை கப், பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன், கல்கண்டு – ஒரு கப், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, உளுந்தை ஒன்றாக சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்து, கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும் உளுந்தை அரைக்கும்போது, தண்ணீர் சிறிது கூட சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும் தீயை மிதமாக எரிய விடவேண்டும். கல்கண்டு வடை தயார்.