
மராட்டிய மாநில ஸ்பெஷலாகிய ஜவ்வரிசி சீலா செய்யும் முறையை எனது மராட்டிய தோழி சீமா மூலம் அறிந்து வீட்டில் செய்ய சூப்பர் டேஸ்ட்டாக இருந்தது.
இதை செய்ய தேவை:
* நன்றாக சுத்தம் செய்த ஜவ்வரிசி -- 2 கிண்ணம்
* கெட்டி தயிர் 1/2 கிண்ணம்
* தேங்காய்ப்பூ 1/2 கிண்ணம்
(ஃப்ரெஷ்)
* மிளகு-சீரகப்பொடி 2 டீஸ்பூன்
* இஞ்சி-பச்சைமிளகாய் பேஸ்ட் 1 டீஸ்பூன்.
* உருளைக் கிழங்கு 2
* வெங்காயம் 2
* பெருங்காயப்பொடி 1 சிட்டிகை
* பொடியாக அரிந்த ஃப்ரெஷ் கொத்தமல்லி இலை 1 கப்
* உப்பு தேவையானது
* நெய் 1/4 கிண்ணம்
* நல்லெண்ணெய் 1/4 கப்
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சுமார் 3 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் தண்ணீரை வடித்தெடுக்கவும். ஜவ்வரிசி குண்டு-குண்டாக ஊறியிருக்கும்.
வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக அரிந்து சிறிது நெய்யில் வதக்கி எடுக்கவும்.
உருளைக்கிழங்கை முக்கால் பகுதி வெந்தெடுத்து தோல் நீக்கி ஆறியபிறகு துருவி வைத்துக்கொள்ளவும்.
ஊறிய ஜவ்வரிசியிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் தனியாக எடுத்து தனியாக வைத்த பிறகு, மீதியில் கெட்டித்தயிர், தேங்காய்ப்பூ, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியிலிட்டு அரைத்துக்கொள்ளவும்.
நெய் மற்றும் நல்லெண்ணையை மிக்ஸ் செய்து வைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை வாயகன்ற பௌலில் விட்டு, இஞ்சி -பச்சைமிளகாய் பேஸ்ட், மிளகு-சீரகத்தூள், உப்பு, பெருங்காயப்பொடி, துருவிய உருளைக்கிழங்கு, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் தனியே எடுத்து வைத்திருக்கும் ஊறிய ஜவ்வரிசி ஆகியவைகளைப் போட்டு தோசைமாவு பதத்தில் நன்றாக கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து காய்ந்ததும், கால் ஸ்பூன் நெய்-எண்ணெய் கலவை லேசாக தடவியபின், மிக்ஸ் செய்து வைத்திருக்கும் ஜவ்வரிசி மாவு கலவையை கரண்டியால் எடுத்து தோசைக்கல்லில் விட்டு பரத்தவும். மீண்டும் இதன் மீது சிறிது நெய்க் கலவையை சுற்றி வரவிடவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
இரண்டு நிமிடங்கள் சென்றபின் திருப்பிப்போட்டு, மறுபடியும் சிறிது நெய்க்கலவையை விட்டு வேகவிடவும். கம-கமவென வாசனை இழுக்கும்.
இருபுறமும் பொன்னிறமாக சிவந்தபின், எடுத்து தட்டில் போட்டு, தேங்காய் அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால், சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும் சத்தானதும் கூட. சிறியவர் முதல் பெரியவர் வரை ருசித்து சாப்பிடுவார்கள் இந்த ஸ்பெஷல் மராட்டிய டிஷ்ஷான ஜவ்வரிசி சீலாவை.