
மூக்கிரட்டை கீரை சூப்:
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளை சூப்பாகவோ, கடைந்தோ செய்து சாப்பிட நல்லது. நீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்க சிரமமாக இருக்கும் சமயங்களில் இந்தக் கீரை நல்ல பலன் அளிக்கும். ரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை குறைக்க உதவுகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும், சிறுநீரகத் தொற்று நோய்கள் வருவதையும் தடுக்க உதவுகிறது.
மூக்கிரட்டை கீரை 1 கப்
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
மிளகுப் பொடி 1 ஸ்பூன்
சீரகப்பொடி 1/2 ஸ்பூன்
பூண்டு 4 பற்கள்
மூக்கிரட்டை கீரையை நன்றாக அலம்பி சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். கீரை நன்கு வெந்ததும் அதில் உப்பு, மஞ்சள் தூள், தட்டிய பூண்டு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு கனமான கரண்டி கொண்டு அதனை நன்கு மசித்து விட்டு வடிகட்டிப் பருக ஆரோக்கியமான மூக்கிரட்டை கீரை சூப் தயார்.
மூக்கிரட்டை கீரை கடையல்:
மூக்கிரட்டை கீரை
பாசிப்பருப்பு
தக்காளி
வெங்காயம்
இஞ்சி பூண்டு
மிளகாய்த் தூள்
மஞ்சள் தூள்
சீரகம்
உப்பு
தாளிக்க: கடுகு, கருவேப்பிலை
பாசிப்பருப்பை நன்கு கழுவி பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற விடவும். மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு போன்றவற்றையும் நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பு, கீரை, தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய்த் தூள், சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து ரெண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.
பருப்பு மற்றும் கீரை நன்கு வெந்ததும் வாணலியில் கடுகு, கறிவேப்பிலை, சிறிது சீரகம் சேர்த்து தாளித்துக் கொட்டி, தேவையான உப்பு சேர்த்து கனமான கரண்டி கொண்டு நன்கு கடைந்து வைக்கவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உதவும் இந்த கீரை கடையல்.
மூக்கிரட்டை கீரைப் பொடி:
மூக்கிரட்டை கீரை 4 கப்
மூக்கிரட்டை கீரையை உலர்த்தி பொடி செய்து உடல் எடையை குறைக்கவும், கண் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்தலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், கால் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கவும் உதவும்.
மூக்கிரட்டை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வெயிலில் நன்கு காய வைக்கவும். காய்ந்தவுடன் கீரையை மிக்ஸியில் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தி வாரத்துக்கு மூன்று நாட்கள் வெந்நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து குடிக்கலாம் அல்லது செய்யும் ரசத்தில் கடைசியாக 2 ஸ்பூன் பொடியை சேர்த்து பயன்படுத்தலாம்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் வேறு சில உடல்நல குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்தப் பொடியை பயன்படுத்தலாம். மற்றபடி அனைவருக்கும் ஏற்ற பொடி இது. நாட்டு மருந்து கடைகளில் மூக்கிரட்டை பொடி கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம்.