
கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது, பதம் தவறி நீர்த்துவிட்டால், சிறிதளவு சோளமாவைக் கரைத்துச் சேர்க்கவும். அல்வா கெட்டிப்படுவதுடன் சுவையும் அதிகரிக்கும்.
அதிரசம் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்க, அதிரச மாவில் புளிக்காத தயிர்சேர்த்துப் பிசைந்து செய்யவும்.
மைசூர்பாகு செய்யும்போது, கடலைமாவுடன், முந்திரியைப் பொடித்துச் சேர்த்துப் பிசைந்தால் மைசூர்பாகு மிகவும் சுவையாக இருக்கும்.
குலோப் ஜாமூனுக்கு மாவு பிசையும்போது, தண்ணீருக்கு பதில் பால் சேர்த்துப் பிசைந்தால், உருண்டைகள் உதிர்ந்து போகாமல் இருக்கும்.
லட்டுக்கு பூந்தி தயாரிக்கும்போது கடலை மாவுடன் சிறிதளவு அரிசி மாவையும் கலந்துகொண்டால், பூந்தி முத்து முத்தாக வரும்.
பால் பவுடர், தேங்காய்த் துருவல், சர்க்கரைத்தூள், முந்திரிப் பொடி எல்லாவற்றையும் ஒரே அளவில் எடுத்து, நன்கு பிசைந்து, நெய் தடவிய தட்டில் பரப்பி ஃ ப்ரீசரில் வைத்து எடுத்து துண்டுகளாக்கி னால் இன்ஸ்டன்ட் பர்ஃபி தயார்.
ஜாங்கிரி உடையாமல் வரவேண்டுமென்றால் உளுந்து விழுதுடன் ஒரு ஸ்பூன் அரிசிமாவைக் கலந்துவிட்டால் போதும்.
அல்வா செய்யும்போது அல்வா பதம் தண்ணீராக இருப்பது போல் தெரிந்தால், சிறிது சோளமாவு சேர்த்துக் கிளறினால் அல்வா கெட்டிப்படும்.
தேங்காய்த் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து தேங்காய் பர்ஃபி செய்தால் பர்ஃபி வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
கேசரி செய்யும்போது, ரவையுடன் பால்கோவா, பொடிப் பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழங்களை கலந்து, வேகவைத்து செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
ரவா லட்டு செய்யும்போது கொஞ்சம் அவலை மிக்ஸியில் ரவை போல் பொடித்துச் சேர்த்து நெய்யில் வறுத்து, பால் பவுடர் சேர்த்து லட்டு பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேங்காய் பர்ஃபி செய்யும்போது கலவையில் ராகிமால்ட் இரண்டு டீஸ்பூன் சேர்த்தால் பஃர்பி கம கமவென்றும் சூப்பர் சுவையிலும் இருக்கும்.