
தொய்யக் கீரை கடையல்:
தொய்ந்துபோன நாடி நரம்புகளை வலுவாக்கும். குளிர்ச்சியானது. மலச்சிக்கலை போக்கும். வாத நோய்க்கு ஏற்ற கீரை. இதனை காட்டுக் கீரை, சுண்ணாம்பு கீரை, துயிலிக் கீரை என்றும் அழைப்பார்கள்.
தொய்யக் கீரை 2 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், தேங்காய் எண்ணெய்
தொய்யக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும். வாணலியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பிரட்டு பிரட்டி இரண்டு கப் தண்ணீர் விடவும். அதில் சுத்தம் செய்த தொய்யக் கீரையை சேர்த்து தேவையான உப்பு போட்டு திறந்து வைத்து வேக விடவும். மூடி வைத்தால் கீரையின் நிறம் மாறிவிடும். ஐந்து நிமிடத்தில் கீரை நன்கு வெந்துவிடும். பிறகு மத்து கொண்டு கடையவும். மத்து இல்லையெனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு கடுகு பொரிந்ததும் கீரையில் போட்டு கலந்து விட மிகவும் சத்தான கீரை கடையல் தயார். இதனை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
சண்டிக்கீரை பருப்பு கூட்டு:
மூட்டு வலி, சளி தொந்தரவை போக்கும் சக்தி கொண்டது. வாத நோய் மற்றும் வாயு தொல்லையை நீக்கி சிறுநீரகத்தை காக்கக்கூடிய கீரை இது. இந்தக் கீரை. சண்டித்தனம் செய்யும் நோயை அடித்து விரட்டும் கீரை என்பதால் இதற்கு இப்பெயர் வந்தது.
சண்டிக்கீரை இலைகள் 10
பயத்தம் பருப்பு 1/2 கப்
தக்காளி 1
சின்ன வெங்காயம் 6
காய்ந்த மிளகாய் 2
சீரகம் 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
தாளிக்க: கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, நெய் ஒரு ஸ்பூன்
சண்டிக்கீரையை சுத்தம் செய்து இதன் நடுவில் உள்ள நரம்பை கத்தியால் கீரி நரம்பை எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். பயத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம் சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் விட்டு வேக விட்டு எடுக்கவும். அதில் பொடியாக நறுக்கிய சண்டிக்கீரையை சேர்த்து வேக விடவும். தேங்காய், மிளகாய், சீரகம் ஆகியவற்றை அரைத்து வெந்த கீரையில் சேர்த்து நன்கு மசித்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாணலியில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பை சிறிது நெய்யில் தாளித்துக் கொட்டி கலந்துவிட மிகவும் ருசியான சண்டிக்கீரை தயார்.
சண்டிக்கீரை சூப்:
சண்டிக்கீரை ஐந்தாறு இலைகள்
தக்காளி 1
சின்ன வெங்காயம் 4
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
பெரிய இலையாக இருப்பதால் நரம்புகளை நீக்கிய பிறகு நறுக்கி பயன்படுத்தவும். சண்டிக்கீரையை சுத்தம் செய்து ஒவ்வொரு இலையையும் ஐந்தாறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு கொதிக்கவிடவும். கடைசியாக மிளகு, சீரகப் பொடியை சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி பருகவும்.
சிறுநீரக கற்களை வெளியேற்றுவது முதல் மூட்டு வலியை குணப்படுத்துவது வரை ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் இந்த சண்டிக்கீரை சூப்.