
இந்தியர்களின் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக உள்ளது பருப்பு. பருப்புகளில் அதிகளவு ப்ரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் உள்ளன. இவை நரம்புகள், தசைகள், இரத்தம் போன்றவைகளுக்கு ஆரோக்கியம் அளித்து, இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வருவதை தடுக்க சிறந்த முறையில் உதவிபுரிகின்றன. பருப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய ஐந்து வகை உணவுகளின் ரெசிபிகளை இப்பதிவில் பார்க்கலாம்.
மிடில் ஈஸ்டர்ன் முஜாதரா (Middle Eastern Mujadara): இந்த உணவு லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலம். சூடான எண்ணெயில் சீரகம், பட்டை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதனுடன் பாஸ்மதி ரைஸ், மசூர் டால், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சமைத்தெடுப்பதே முஜாதரா ரைஸ். இதன் மீது கேராமலைஸ்ட் ஆனியன் மற்றும் மல்லி இலைகள் தூவி அலங்கரிப்பது அவசியம்.
இத்தாலியன் லென்டில் ஸ்டூ: வளர்ச்சி தர உதவக்கூடிய உணவாக இத்தாலியர்களால் நம்பப்படும் இந்த ஸ்டூ, நியூ இயர் ஈவ் அன்று விரும்பி உண்ணப்படுகிறது. சூடான ஆலிவ் எண்ணெயில் வெங்காயம், பூண்டு, கேரட், தக்காளி, செலரி மற்றும் ரோஸ் மேரி, தைமே போன்ற மூலிகை இலைகள் சேர்த்து வதக்கி அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி காய்களை வேகவைக்க வேண்டும். பின் தனியாக வேக வைத்தெடுத்தமசூர் பருப்பை கடைந்து ஸ்டூவில் சேர்த்து, ஸ்டூ கொதித்து ஒன்று சேர்ந்து வந்ததும் உண்டு மகிழலாம்.
டர்கிஷ் ரெட் லென்டில் சூப் (Turkish Red Lentil Soup): ரெட் லென்டில் பருப்புடன் வெங்காயம், கேரட், சீரகம் மற்றும் பாப்ரிக்கா சேர்த்து குழைய வேகவைத்து மசித்து, சூப் நிலை வரும்படி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து இறக்க ரெட் லென்டில் சூப் தயாராகிவிடும். பரிமாறுவதற்கு முன் சூப்பில் சிறிது லெமன் ஜூஸ் சேர்த்து சில்லி ஆயில் தெளித்தால் சூப்பிற்கு கவர்ச்சிகரமான நிறமும் காரசாரமான சுவையும் கிடைக்கும்.
ஃபிரஞ்ச் லென்டில் சாலட் (French Lentil Salad): ஊறவைத்த, முளைகட்டிய அல்லது வேகவைத்த பாசிப்பயறுடன், நீளவாக்கில் நறுக்கிய சாம்பார் வெங்காயம், கேரட், ஃபிரஷ் மூலிகை இலைகள் மற்றும் டைஜோன் வினைக்கிரேட் (Dijon Vinaigrette) சேர்த்துக் கலந்து, மேற்பரப்பில் வேகவைத்து நறுக்கிய முட்டைத் துண்டுகள் மற்றும் துருவிய சீஸ் தூவி அலங்கரித்தால் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த ஃபிரஞ்ச் லென்டில் சாலட் தயார்.
இந்திய பருப்பு குழம்பு (Lentil Curry): பாசிப்பருப்பு, துவரம்பருப்பு கடலைப்பருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒன்றுடன் மஞ்சள் தூள், பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வேகவைக்கவும். பிறகு எண்ணெய் அல்லது நெய்யில் கடுகு, சீரகம் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பருப்பில் கொட்ட சுவையான பருப்பு குழம்பு ரெடி. சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து உண்ண ஏற்றது.
நம் ஊரில் கிடைக்கும் பருப்பு வகைகளில் ஏதாவது ஒன்றை சமைத்து நம் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் நிலைத்த ஆரோக்கியம் பெற்று வாழலாம்.