
பால் புரதச்சத்து மிக்க ஒரு அன்றாட உணவு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அருந்தும் ஒரு பானம் என்றால் அது பால்தான். பாலில் பலவிதமான இனிப்புகள் செய்வது வழக்கம். சூப், கஞ்சி வகைகளும் பாலை வைத்து செய்யலாம். இதோ பால் வைத்து செய்யப்படும் ரெசிபிகள்.
வெஜ் மில்க் சூப்
தேவை:
கேரட், பீன்ஸ், உருளை, காலிஃப்ளவர் பட்டாணி - இப்படி வீட்டில் இருக்கும் காய்கறிகள் அனைத்தும் சேர்ந்த கலவை ஒரு கப்
பெரிய வெங்காயம்- ஒன்று வெண்ணெய்- இரண்டு டீஸ்பூன் கான்ஃப்ளார் மாவு - ஒரு டீஸ்பூன்
காய்ச்சிய பால்- கால் கப்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள்- தேவையான அளவு
செய்முறை:
காலிஃப்ளவரை மட்டும் சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். பட்டாணியை உரித்து வைக்கவும். கேரட் உருளை தோல் சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி பீன்ஸ் உடன் எல்லா காய்கறிகளையும் ஒன்றாக குக்கரில் சேர்த்து குழைய வேகவிடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெயை போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கார்ன் மாவை பாலில் கட்டியின் கரைத்து வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் வேகவைத்த காய்கறியை நன்கு மசித்து சேர்த்து கிளறி இறக்கி தேவையான உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதில் தேவையான தண்ணீர் சேர்ப்பது அவசியம் இல்லை எனில் கட்டித் தன்மையுடன் ஆகிவிடும்.
வாழைப்பழ மில்க்க்ஷேக்
தேவை:
செவ்வாழைப்பழம் அல்லது ரஸ்தாலி பழம் - ஒன்று
சாக்கோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
பால் - ஒரு கப்
சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை- நான்கு ஸ்பூன்
ரோஸ் அல்லது வெண்ணிலா எசன்ஸ் - சில துளிகள்
செய்முறை:
பழத்தை துண்டுகளாக்கி அத்துடன் சர்க்கரை , சாக்கோ பவுடர் , காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எசன்ஸ் சேர்த்துக் கலக்கி குளிர்பதனப்பெட்டியில் வைத்து பரிமாறவும். இந்த பனானா ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒன்றாக இருக்கும். தேவை என்றால் சிறிது ஏலக்காய்த்தூள் பயன்படுத்தலாம்.
சத்துமாவு பால் கொழுக்கட்டை
தேவை:
அரிசி மாவு - அரை கப்
குதிரைவாலி அரிசி மாவு- அரை கப்
பால் - அரை லிட்டர்
நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன்
பாதாம் பவுடர் - ஒரு டேபிள் ஸ்பூன்(தேவை எனில்)
உப்பு - ஒரு சிட்டிகை
வெல்லம் - தேவையான அளவு
ஏலக்காய்- 4
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு சிட்டிகை உப்பு நல்லெண்ணெய் சேர்க்கவும். இந்த நீரை குதிரைவாலி அரிசி மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக செய்வோம் இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைக்கவும். பாலுடன் பாதாம் பவுடர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
இதில் உருண்டைகளை எடுத்து போட்டு நிதானமான தீயில் வைத்து கிளறிவிடவும். சில நிமிடங்கள் கழித்து உருண்டைகள் வெந்ததும் இறக்கி ஆறவிடும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்துக் கலந்து கிண்ணத்தில் போட்டு பரிமாறவும். குழந்தைக்கேற்ற சத்துக்கள் கொண்ட கொழுக்கட்டை இது.